பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 3.pdf/112

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

112

மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம்-3



சிவபெருமான் திருவிரட்டை மணிமாலை

வெண்பாவும் கலித்துறையும் ஆகிய இரண்டு வகைச் செய்யுட்களினால் சிவபெருமான் மேல் பாடப்பட்ட தோத்திர நூல். முப்பத்தேழு செய்யுட்களைக் கொண்டது. கபிலதேவ நாயனாரால் பாடப்பட்டது. பதினோராந் திருமுறையில் தொகுக்கப்பட்டுள்ளது.

சிவபெருமான் திருவந்தாதி

வெண்பாக்களினால் அந்தாதித் தொடையாகச் செய்யப்பட்ட நூறு செய்யுட்களைக் கொண்ட தோத்திரநூல். கபில தேவநாயனார் செய்தது. இதுவும் பதினோராந் திருமுறையில் தொகுக்கப்பட்டிருக்கிறது.

இந்த மூன்று செய்யுட்களையும் (மூத்த நாயனார் இரட்டை மணிமாலை, சிவபெருமான் இரட்டைமணிமாலை, சிவபெருமான் திருவந்தாதி பாடியவர் கபிலதேவநாயனார். இவர் கடைச்சங்க காலத்தில் இருந்த கபிலர் அல்லர். பிற்காலத்தில் இருந்த கபிலதேவ நாயனார். சங்க காலத்தில் இருந்த கபிலர் ஐங்குறுநூற்றில் குறிஞ்சித்திணையையும் கலித்தொகையில் குறிஞ்சிக்கலியையும் பாடியவர். அகநானூற்றில் பதினெட்டுச் செய்யுட்களையும், குறுந்தொகையில் இருபத்தேழு செய்யுட்களையும், புறநானூற்றில் இருபத்தெட்டுப் பாடல்களையும், பத்துப்பாட்டில் குறிஞ்சிப் பாட்டையும் பாடினார். மற்றும் பதிற்றுப்பத்து ஏழாம்பத்தைச் செல்வக்கடுங்கோ வாழியாதன் மேல் பாடியுள்ளார். அவர் வேறு, களப்பிரர் காலத்தில் பக்தி இயக்கம் தோன்றிய காலத்தில் இருந்த கபிலதேவநாயனார் வேறு. பதினெண் கீழ்க்கணக்கு நூல்களில் ஒன்றான இன்னா நாற்பது என்னும் நூலைச் செய்தவர் கபிலதேவநாயனாரே. சங்க காலத்தில் மூத்த நாயனார் (கணபதி, பிள்ளையார்) வணக்கம் ஏற்படவில்லை. மூத்த நாயனார் இரட்டை மணிமாலையை ஆனைமுகன் மேல் பாடிய கபிலதேவ நாயனார் பிற்காலத்தவர் என்பது வெளிப்படை, இவர் இயற்றிய இன்னா நாற்பது என்னும் நூலைப் பற்றிப் பதினெண் கீழ்க்கணக்கு என்னும் தலைப்பில் இந்நூலில் வேறு இடத்தில் காண்க.

வித்துவான் திரு. வேங்கடராஜுலு ரெட்டியாரும் இக்கருத்தையே கூறுகிறார். “பிற்காலத்து நூல்களிலேயே முதலில் விநாயக வணக்கம் காணப்படுகின்றது. இவற்றால், கி.பி.6ஆம் நூற்றாண்டு வரையில் தமிழ்நாட்டில் விநாயக வழிபாடு நடைபெற்றிலது என்பது அறியலாகும். ‘மாணிக்கவாசகர் வரலாறும் காலமும்’ என்னும் நூலிலும்