பண்டைத் தமிழக வரலாறு - களப்பிரர்
127
களப்பிரர் ஆட்சிக் காலத்துக்குப் பிறகு கி.பி. 7ஆம் நூற்றாண்டில் இருந்த திருநாவுக்கரசரும் திருஞானசம்பந்தரும் தங்களுடைய தேவாரப் பதிகங்களில் கூறுகிற கோவிற் கட்டட வகைகளான கரக்கோவில், நாழற்கோவில், கோகுடிக்கோவில், பெருங்கோவில், இளங்கோவில், மாடக்கோவில், தூங்கானை மாடம், மணிக்கோவில் முதலான கட்டட வகைகள் களப்பிரர் காலத்திலேயே தோன்றி இருக்கவேண்டும். ஏனென்றால், இந்தக் கட்டடவகையெல்லாம் திடீரென்று 7ஆம் நூற்றாண்டிலே தோன்றியிருக்க முடியாது. அக்காலத்தில் அவை செங்கற் கட்டடங்களாக இருந்தன. கி.பி. 7ஆம் நூற்றாண்டின் நடுப்பகுதியில் முதல் மாமல்லன் நரசிம்மவர்மன் என்னும் பல்லவ அரசன் காலத்தில் மாமல்லபுரத்தில் அமைக்கப்பட்ட பஞ்சபாண்டவரதங்கள் முதலான கோவில் அமைப்புகள் அவன் காலத்துக்கு முன்பு களப்பிரர் ஆட்சிக் காலத்தில் அல்லது அதற்கு முன்பு இருந்த செங்கற்கட்டடங்களின் மாதிரியைக் காட்டுகிற பாறைக்கல் அமைப்புகள். இந்தப் பாறைக் கற்கோவில்களில் பல அகநாழிகை (கர்ப்பக்கிருகம்) இல்லாமலே கட்டடத்தின் மேற்புறத்தோற்றம் மட்டும் பாறைக்கல்லில் அமைத்துக் கட்டப்பட்டுள்ளன. ஆகையால், மாமல்லபுரத்து இரதக் கோவில்கள், செங்கற்கட்டடங்களாக இருந்த பழைய கோவில்களின் தத்ரூப உருவ அமைப்புகள் என்பதில் ஐயமில்லை.
களப்பிரர் ஆட்சிக் காலத்தில் பௌத்தரும் சமணரும் பள்ளிகளையும் விகாரங்களையும் கட்டியிருந்தனர். அந்தக் கட்டடங்களின் உருவ அமைப்பும் இந்தக் கட்டங்களின் அமைப்புப் போலவே இருந்திருக்க வேண்டும் என்று தோன்றுகிறது. சமண சமயக் கோவில்களுக்குச் சினகரம் என்று பெயர் இருந்தது (ஜினன் + நகரம் = ஜினகரம், சினகரம்). விஷ்ணுவின் கோயிலுக்கு விண்ணகரம் என்று பெயர் இருந்தது. சமண, பௌத்தக் கோவிலுக்குச் சேதியம் என்னும் பெயரும் உண்டு. பௌத்தப் பிக்குகள் இருந்த ஆசிரமம் அல்லது விகாரைகள் பெரிய கட்டடங்கள். அவை காஞ்சி, நாகை, உறையூர், காவிரிப் பூம்பட்டினம் முதலான நகரங்களில் இருந்தன. காவிரிப்பூம்பட்டினத்தில் இருந்த பௌத்த விகாரை, நெடுஞ்சுவர்களும் பெரிய வாயில்களும் உடையதாக வெண்சுதை பூசப்பெற்றுக் கயிலாயம் போன்று இருந்ததென்றும் அது கண (கண்ண) தாசன் என்னும் அமைச்சனால் (களப்பிர அரசனுடைய அமைச்சன்) கட்டப்பட்ட தென்றும் அபிதம்மாவதாரம் என்னும் பௌத்தமத நூல் கூறுகிறது. சோழநாட்டில் பூத