பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 3.pdf/128

இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

128

மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம்-3


மங்கலம் என்னும் ஊரில் இருந்த பௌத்த விகாரையைக் கட்டியவர் வேணுதாசர் (விஷ்ணுதாசர்) என்று வினய வினிச்சயம் என்னும் நூல் கூறுகிறது. இவையெல்லாம் செங்கற் கட்டடங்களே.

சிற்பக்கலை

சிற்பக்கலை என்பது தெய்வங்கள், மனிதர், மிருகம், பறவை, மரம், செடி, கொடி முதலியவைகளின் உருவங்களைச் சுதை, மரம், கல் முதலியவற்றில் அமைப்பது. சிற்பக்கலையையும் கட்டடக் கலையையும் சிற்பம் என்றே நமது நாட்டுக் கலை நூல்கள் கூறுகின்றன. களப்பிரர் காலத்துச் சிற்பங்களும் கிடைக்க வில்லை. சுதை, மரங்களினால் செய்யப்பட்டபடியால் அவை அழிந்து போயின. கருங்கல்லில் சிற்ப வடிவங்கள் புடைப்புச் சிற்பமாக (புடைப்புச் சிற்றம் - Basrelief) அமைக்கப்பட்டன.

ஓவியக்கலை

ஓவியம் என்பது சித்திரம். ஓவியம் பலவித நிறங்களினால் எழுதப்பட்டது. அந்தக் காலத்து ஓவியங்கள் பெரும்பாலும் சுவர்களில் எழுதப்பட்ட சுவர் ஓவியங்களே. பௌத்த, சைன விகாரைகளிலும் பள்ளிகளிலும் கோவில்களிலும் சுவர் ஒவியங்கள் எழுதப்பட்டன. கடைச்சங்க காலத்தில் திருப்பரங்குன்றத்தின் மேல் இருந்த முருகக் கடவுளின் ஆலயத்தின் மண்டபச் சுவர்களில் வண்ண ஓவியங்கள் எழுதப்பட்டிருந்ததைப் பரிபாடல் கூறுகிறது. ‘சுவரை வைத்தல்லவோ சித்திரம் எழுத வேண்டும்' என்னும் பழமொழி, கட்டடச் சுவர்களில் சித்திரங்கள் எழுதப்பட்டதைத் தெரிவிக்கிறது. படத்தில் (படம் - துணி) சித்திரம் எழுதும் பழக்கமும் இருந்தது. படம் என்னும் சொல் துணியில் எழுதப்பட்ட ஓவியத்துக்குப் பெயராம். இக்காலத்தில் பலகை, காகிதம் ஆகிய பொருள்களில் எழுதப்பட்ட ஓவியங்களுக்குப் படம் என்று கூறப்படுகிறது. ஓவியக்கலை எளிதில் மறைந்துவிடக்கூடிய இயல்புடையது. களப்பிரர் காலத்துக் கட்டடங்கள் அழிந்து போனபடியால் அக்காலத்துச் சுவர் ஓவியங்களும் மறைந்து போயின. துணியில் எழுதப்பட்ட படங்களும் மறைந்து போயின.

இசைக்கலை

நுண்கலைகளில் ஓவியக்கலைக்கு அடுத்தபடியாகக் கூறப்படுவது இசைக்கலை. இசையில் யாழ், குழல், முடிவு முதலான இசைக்