பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 3.pdf/129

இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

பண்டைத் தமிழக வரலாறு - களப்பிரர்

129


கருவிகளும் அடங்கும். இசைக்கலையோடு கூத்துக் (நாடகம்) கலையும் அடங்கும். கூத்துக்கலையைப் பரத நாட்டியம் என்று இக்காலத்தில் வழங்குகிறோம். இசையும் கூத்தும் சங்க காலத்திலே பெரிதும் வளர்ந்திருந்ததைச் சிலப்பதிகாரத்தினால் அறிகிறோம். களப்பிரர் காலத்தில் இந்தக் கலைகள் மேலும் வளர்ந்திருந்தன என்பதை அறிகிறோம். களப்பிரர் காலத்தில் இருந்த காரைக்கால் அம்மையார் பதிகம் என்னும் இசைப் பாடலைப் பாடியுள்ளார். தேவாரப் பதிகங்கள் இசைப்பாடல்களே. தேவாரப் பதிகங்களைப் பாடிய அப்பர், சம்பந்தர் காலத்துக்கு முன்னே களப்பிரர் ஆட்சிக் காலத்தில் இருந்த காரைக்கால் அம்மையார் முதல்முதல் பதிகம் (இசைப்பாடல்) பாடினார். அவர் பாடியவை இரண்டு பதிகங்கள். அவை திருவாலங்காட்டுச் சிவபெருமான் மேல் பாடப்பட்டவை. அப்பதிகங்களுக்கு திருவாலங்காடு மூத்த திருப்பதிகங்கள் என்று பெயர். திருநாவுக்கரசர், திருஞான சம்பந்தர் ஆகிய சைவ சமயக் குரவர்கள் பதிகம் பாடுவதற்கு முன்பு பாடியதால் இப்பதிகங்களுக்கு மூத்த திருப்பதிகங்கள் என்று பெயர் உண்டாயிற்று. முதல் பதிகத்தின் பண் நட்ட பாடை. இரண்டாம் பதிகத்தின் பண் இந்தளம். காரைக்கால் அம்மையார் பாடிய முதலாம் மூத்த திருப்பதிகத்தில் 9ஆம் பாடலில் பண்களின் பெயர்களையும் இசைக்கருவிகளின் பெயர்களையும் கூறுகிறார். அப்பாடல் வருமாறு:

துத்தம் கைக்கிளை விளரி தாரம் உழை இளி ஓசை பண்கெழுமப் பாடிச் சச்சரி கொக்கரை தக்கையோடு தகுணிச்சற் துந்துமி தாளம் வீணை மத்தளங் காடிகை முன்கை மென்தோல் தமருகம் குடாமுழா மொந்தை வாசித் தத்தன்மை வினோ டாடு மெங்கள் அப்பனிடம் திருவாலங்காடே

களப்பிரர் காலத்தில் இசைக்கலை முன்பிருந்ததைவிட அதிக வளர்ச்சி பெற்றிருக்க வேண்டும். அவற்றின் விவரம் தெரிய வில்லை.

கூத்துக்கலையும் களப்பிரர் காலத்தில் வளர்ந்திருந்தது. இசையும் கூத்தும் தமிழரின் பழமையான செல்வங்கள். சங்க காலத்தில் இசையும் கூத்தும் வளர்ந்திருந்ததைச் சிலப்பதிகாரம், மணிமேகலை என்னும் இரண்டு காவியங்களினால் அறிகிறோம். களப்பிரர் காலத்தில்