பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 3.pdf/142

இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

142

மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம்-3


ஏறத்தாழக் கிபி 250இல் முடிவடைந்து விட்டது. ஆகவே, பாண்டியர் ஆட்சிக் காலத்திலேயே வச்சிரநந்தி திராவிட சைன சங்கத்தை அமைத்தார் என்று இவர் கூறுவது தவறு.

இனி, திரு. எஸ். வையாபுரிப் பிள்ளையவர்கள் வச்சிர நந்தியின் திராவிட சங்கத்தைப் பற்றிக் கூறுவதைப் பார்ப்போம். இவர் கூறுகிற சில கருத்துகளை ஒவ்வொன்றாகப் பார்ப்போம். தொல்காப்பியம் வச்சிர நந்தியின் திராவிட சங்கத்தில் எழுதி வெளியிடப்பட்ட நூல் என்று வையாபுரியார் எழுதுகிறார். இதற்குச் சான்று, தொல்காப்பியத்தில் ஓரை என்னுஞ்சொல் காணப்படுகிறதாம்! இவர் இதுபற்றி எழுதுவது வருமாறு:

"வச்சிரநந்தியின் பேர்போன சங்கம் கி.பி. 470இல் நிறுவப்பட்டது. தொல்காப்பியம் அந்தச் சங்கத்திலிருந்து வெளிவந்த முதல் இலக்கியமாக இருக்கக்கூடும். இதன் ஆசிரியர் ஓரை என்னும் சொல்லை (பொருள் 135) ஆள்கிறார். ஓரை (சமஸ்கிருத ஹோரா) என்னும் சொல்லைக் கிரேக்க மொழியிலிருந்து கி.பி. 3ஆவது அல்லது 4ஆவது நூற்றாண்டில் சமஸ்கிருத மொழிக்காரர் கிரேக்க மொழியிலிருந்து எடுத்துக்கொண்ட ஹோராவைத் தொல்காப்பியம் கூறுகிறபடியால் இந்நூல் கி.பி. 4 ஆம் நூற்றாண்டில் எழுதப்பட்டிருக்க வேண்டும்" (S.Vaiyapuri Pillai, History of Tamils Language and Literature, 1956, p.14).

வையாபுரியார் கூறுகிற இந்தக் கருத்து இவருடைய சொந்தக் கருத்து அன்று. திரு. கே. என். சிவராசபிள்ளை இந்தத் தவறான கருத்தை முன்னமே வெளியிட்டுள்ளார். அவரிடமிருந்து எடுத்துக்கொண்ட இந்தத் தவறான கருத்தை வையாபுரியார், தான் எங்கிருந்து இக்கருத்தைப் பெற்றுக்கொண்டார் என்பதைக் கூறாமல் தன்னுடைய சொந்தக் கருத்தாகக் கூறுகிறார். சிவராசபிள்ளை கூறியுள்ளது இது: ஹோரா என்னும் கிரேக்க மொழிச் சொல் கி.பி. 5ஆம் நூற்றாண்டில் சமஸ்கிருத மொழியில் சென்று பிறகு அந்தச் சொல் தொல்காப்பியத்தில் ஓரை என்று வழங்கப்பட்டது. ஆகவே, அந்தச் சொல்லை வழங்குகிற தொல்காப்பியர் கி.பி. 5ஆம் நூற்றாண்டுக்குப் பிற்பட்ட காலத்தவர் என்று அவர் 1932 ஆம் ஆண்டில் எழுதிவைத்தார் (K.N. Sivaraja Pillai, The Chronology of the Early Tamils, 1932, pp. 263-264). சிவராசபிள்ளை கூறிய இந்தக் கருத்தை வையாபுரிப்பிள்ளை எடுத்துக்கொண்டு, ஓரையைக் கையாளும் தொல்காப்பியர் வச்சிரநந்தியின் திராவிடச் சங்கத்தில் இருந்தவர் என்று எழுதிவிட்டார்.