பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 3.pdf/144

இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

144

மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம்-3



“ஓரை - விளையாட்டென்பது, சங்க இலக்கியம் முழுவதும் அச்சொல்லுக்கு அப்பொருளாட்சியுண்மையால் விளங்கும். ஓரைக்கு இராசி அல்லது முகூர்த்தம் எனும் பொருளுண்மைக்குத் தொல் காப்பியத்திலேனும் சங்க இலக்கியம் எதிலேனும் சான்று காணுதலரிது. மிகவகன்ற பிற்காலப் புலவர் சிலர் முகூர்த்தம் (அதாவது ஒரு நாளினுள் நன்மை தீமைகளுக்குரியதாகப் பிரித்துக் கொள்ளப்படும் உட்பிரிவு) என்ற பொருளில் இச்சொல்லைப் பிரயோகிக்கலானார். அக்கொள்கைக்கே சான்றில்லாத சங்க இலக்கியத்தில், 'ஓரை' என்னுந் தனித் தமிழ்ச் சொல்லுக்கு, அக்காலத்திலக்கியங்களால் அதற்குரிய பொருளாகக் காணப்பெறும் விளையாட்டையே அச்சொல் குறிப்பதாகக் கொள்ளுவதே முறையாகும். அதை விட்டுப் பிற்கால ஆசிரியர் கொள்கையான இராசி அல்லது முகூர்த்தம் எனும் பொருளை இத்தமிழ்ச் சொல்லுக்கு ஏற்றுவதே தவறாகும். அதற்கு மேல் அச்சொல்லைக் கொண்டு தொல்காப்பியம் அடையப் பிற்காலத்து நூலென்று வாதிப்பது அறிவுக்கும் ஆராய்ச்சியறத்திற்கும் பொருந்தாது.”

ஓரை என்னும் தமிழ்ச் சொல்லுக்குப் பேராசிரியர் சோம சுந்தர பாரதியாரவர்கள் விளையாட்டு என்று பொருள் கூறியுள்ளார். இது அச்சொல்லுக்கு மிக அண்மையான பொருளே. இதற்குச் சரியான பொருள் சிறுவர் சிறுமியர் வாழும் இடம் என்று தோன்றுகிறது. பழங்காலத்துத் திராவிட இனத்தார் தாங்கள் வாழ்ந்த கிராமத்திலுள்ள சிறுவர் கூட்டத்தையும் சிறுமியர் கூட்டத்தையும் வெவ்வேறாகப் பிரித்து அவர்களைத் தனித்தனியே வெவ்வேறு இடங்களில் வைத்து வளர்த்தார்கள். வடஇந்தியாவில் வாழ்ந்த திராவிடர்களும் இவ்வாறு சிறுவர் சிறுமியரை வெவ்வேறாகப் பிரித்து வைத்துள்ள இடத்துக்கு ஓரை என்று பெயர் கூறினார்கள் என்று தெரிகிறது.

வடஇந்தியாவிலும் ஆதிகாலத்தில் திராவிட இனமக்கள் வெவ்வேறு இடங்களில் வாழ்ந்தார்கள். அந்தத் திராவிடர் இக்காலத்தில் ஆரியரோடு கலந்து மொழி, கலை, பண்பாடுகளில் மாறிப் போனார்கள். அவர்களில் சில இனத்தார் இன்றும் உள்ளனர். அவர்கள் தங்கள் பழைய இடங்களிலிருந்து துரத்தப்பட்டு வேறு இடங்களில் போய் வாழ்கிறார்கள். அவர்களில் முண்டா என்னும் திராவிட இனத்தார் சோட்டா நாகப்பூரில் இருக்கிறார்கள். அவர்களுடைய திராவிட மொழியில் இக்காலத்தில் மைதிலி, வங்காளி, இந்தி முதலான மொழிகளின் சொற்களும் கலந்துவிட்டன. ஆனாலும், பழைய திராவிட இனத்தவரின்