பண்டைத் தமிழக வரலாறு - களப்பிரர்
147
மதம் தமிழ் நாட்டுக்கு வரவில்லை. கி.மு. மூன்றாம் நூற்றாண்டிலேயே சந்திரகுப்த மௌரியன், அசோகச் சக்கரவர்த்தி காலத்திலேயே சைன மதமும் பௌத்த சமயமும் தமிழகத்துக்கு வந்து விட்டதை வரலாறு கூறுகிறது. ஆகவே, பாண்டியரின் கடைச்சங்கத்திலே சைனப் புலவரும் இருந்தனர் என்பதில் ஐயமில்லை. இந்த வரலாற்று உண்மையை அறியாமல் வையாபுரியார் வச்சிரநந்தியின் தமிழ்ச் சங்கத்தில்தான் உலோச்சனார், மாதீர்த்தனார் போன்ற சைன சமயப் புலவர்கள் இருந்திருக்க வேண்டும் என்று கூறுவது ஆதாரமற்ற போலிக் கூற்றாகும்.
வச்சிரநந்தியின் தமிழ் சைனச் சங்கம் சைன சமயத்தாருக்கே உரியது. அதில் சைனத் துறவிகள் மட்டுமே இருந்தார்கள். வேறு சமயத்தவருக்கு அதில் இடம் இல்லை. வச்சிரநந்தியின் சங்கத்துச் சைனத் துறவிகள் சிற்றின்பத்தில் (அகப்பொருளில்) ஈடுபடக் கூடாது; கள், இறைச்சி உண்ணக்கூடாது; கொலை செய்வது கூடாது. இவை யெல்லாம் சைன சமயத்தின் அடிப்படையான, கண்டிப்பான கொள்கைகள். ஆனால், வையாபுரியார், வச்சிரநந்தி சைனத் தமிழச் சங்கத்தில் இருந்தவர் என்று கூறுகிற உலோச்சனார் எதையெதைப் பாடினார் என்பதைப் பார்ப்போம்.
அகநானூற்றில் எட்டுப் பாடல்களும் குறுந்தொகையில் நான்கு செய்யுட்களும் நற்றிணையில் இருபது பாடல்களும் ஆக முப்பத்திரண்டு செய்யுட்களை உலோச்சனார் பாடியுள்ளார். இந்தப் பாடல்கள் எல்லாம் அகப்பொருள் துறையமைந்த காதற்பாட்டுகள், சைன முனிவர் எதைப் பாடக்கூடாதோ அந்த அகப்பொருள் காதற் பாட்டுகளை இவர் பாடியுள்ளார்! இந்தப் புலவர் சைனராக இருக்க முடியுமா! அதிலும் துறவிகள் மட்டும் உள்ள வச்சிரநந்தியின் திரமிளச் சைன சங்கத்தில் இவர் இருந்திருக்க முடியுமா? மேலும், இந்தக் காதற் பாட்டுகளிலே கொலையையும் இறைச்சியையும் சிறப்பித்துப் பாடுகிறார் இந்தச் சைனத் துறவி!
மீன்களை மணலில் பரப்பி வெயிலில் உலர்த்துவதைக்கூறுகிறார் (அகம் 20, நற்றிணை 63, 331). மீன்பிடிக்கும் வலையைப் பாடுகிறார் (அகம் 300). மீனைச் சுடுகிற நெருப்பிலிருந்து வருகிற புகையைப் பாடுகிறார் (நற்றிணை 311), பனங்கள்ளைப் பாடுகிறார் (நற்றிணை 38). மதுபானம் செய்து மகிழ்ந்திருக்கும் பெரியன் என்பவனைப் பாடுகிறார்