பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 3.pdf/149

இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

பண்டைத் தமிழக வரலாறு - களப்பிரர்

149


படவில்லை” (வச்சிரநந்தியின் சங்கத்தைத்தான் கேள்விப்படுகிறோம்) என்று வையாபுரியார் எழுதுகிறார் (S. Vaiyapuri, Pillai, History of Tamil Language and Literature, p.5). அதாவது. புறம் 175, அகம் 59, 193 ஆகிய செய்யுட்களைப் பாடியவர்களும் சைன சமயத்தார் என்றும் அவர்கள் வச்சிரநந்தியின் தமிழச் சைன சங்கத்தைச் சேர்ந்தவர்கள் என்றும் வையாபுரியார் கூறுகிறார். இவர் கூறுவதை ஆராய்ந்து உண்மை காண்போம்.

புறம் 175ஆம் செய்யுளைப் பாடியவர் கள்ளில் ஆத்திரையனார். இவருடைய பெயரே இவர் பிரமாணர் என்பதைத் தெரிவிக்கிறது. இவருக்கு உதவி செய்த ஆதனுங்கன் என்பவனை இவர் இச்செய்யுளில் பாடுகிறார். என் உயிர் போமளவும் என் மனம் உன்னை மறக்காது என்று இவர் கூறுகிறார். இதில் சைன சமயக் கொள்கை என்ன இருக்கிறது? இது எல்லாச் சமயத்தாருக்கும் உரிய கருத்துத்தானே! வையாபுரியார் சுட்டிக்காட்டுகிற இன்னொரு செய்யுள் (அகம் 59) மருதன் இளநாகனார் பாடியது. யமுனையாற்றில் நீராடிய மகளிரின் ஆடைகளைக் கண்ணன் ஒளித்து வைத்ததை இச்செய்யுள் குறிப்பிடுகிறது.

வண்புனல் தொழுநை வார்மணல் அகன்றுறை அண்டர் மகளிர் தண்டழை உடீஇயர் மரஞ்செல மிதித்த மாஅல் போல (அகம் 59:4 - 6)

இது சைன சமயக் கருத்து என்று வையாபுரியார் கூறுகிறார். இது தமிழ் நாட்டில் அக்காலத்தில் வழங்கிவந்த எல்லாச் சமயத்தாருக்கும் உரிய பொதுக் கருத்து. இதை வையாபுரியார் சைனரின் புராணக் கதை என்று கூறுகிறார். இதைப் பாடியவர் மருதனிள நாகனார். இவர் சைனர் அல்லர். கடைச் சங்கப் புலவரான அவர் எப்படி வச்சிரநந்தியின் சைன சங்கத்தில் (கி.பி.5ஆம் நூற்றாண்டில்) இருக்க முடியும்? வையாபுரியார் சுட்டிக் காட்டுகிற இன்னொரு அகம் 193ஆம் செய்யுளும் மருதன் இளநாகனார் பாடியதே. பருந்து ஒன்று இறைச்சித் துண்டைக் கொண்டுபோய் மலையுச்சியில் மரத்தின்மேல் இருந்த தன்னுடைய குஞ்சுக்கு ஊட்ட, அவ்விறைச்சி நழுவிக் கீழே விழுந்ததை அங்கிருந்த நரி கவ்விக்கொண்டு ஓடியது என்னும் இயற்கை நிகழ்ச்சியை இப்புலவர் இப்பாடலில் கூறுகிறார்.