பண்டைத் தமிழக வரலாறு - களப்பிரர்
153
தரல்வேண்டும்' எனப், 'போமின். நுமக்கோர் காரணிகனை எங்ஙனம் நாடுவேன்? நீயிர் நாற்பத்தொன்பதின்மராயிற்று. நுமக்கு நிகாராவார் ஒருவர் இம்மையினின்றே' என்று அரசன் சொல்லப் போந்து பின்னையும் கன்மாப்பலகை ஏறியிருந்து அரசனும் இது சொல்லினான் ‘யாங் காரணிகனைப் பெறுமாறு என்னைகொ' வென்று சிந்தித் திருப்புழிச் சூத்திரஞ் செய்தான் ஆலவாயி லவிர்சடைக் கடவுளன்றோ! அவனையே காரணிகனையுந் தரல் வேண்டுமென்று சென்று வரங்கிடத்தும்' என்று சென்று வரங்கிடப்ப, இடையாமத்து, 'இவ்வூர் உப்பூரிகுடி கிழார் மகனாவான் உருத்திரசன்மன் என்பான், பைங் கண்ணன் புன்மயிரான் ஐயாட்டைப் பிராயத்தான் ஒரு மூங்கைப் பிள்ளை உளன்; அவனை அன்னனென் றிகழாது கொண்டு போந்து ஆசனமேலிரீஇக் கீழிருந்து சூத்திரம் பொருளுரைத்தாற் கண்ணீர் வளர்ந்து மெய்ம்மயிர் சிலிர்க்கும் மெய்யாயின உரை கேட்டவிடத்து; மெய்யல்லா உரைகேட்டவிடத்து வாளா இருக்கும். அவன் குமார தெய்வம், அங்கோர் சாபத்தினாற் றோன்றினான் என முக்காலிசைத்த குரல் எல்லார்க்கும் உடன்பாடாயிற்றாக, எழுந்திருந்து தேவர் குலத்தை வலங்கொண்டு போந்து, உப்பூரிகுடிகிழாருழைச் சங்க மெல்லாஞ் சென்று, இவ்வார்த்தை யெல்லாஞ் சொல்லி ஐயனாவான் உருத்திர சன்மனைத் தரல் வேண்டுமென்று வேண்டிக் கொடுபோந்து, வெளிய துடீஇ, வெண்பூச்சூட்டி, வெண்சாந்தணிந்து, கன்மாப்பலகை யேற்றி இரீஇக் கீழிருந்து சூத்திரப் பொருளுரைப்ப, எல்லாரும் முறையே உரைப்பக் கேட்டு வாளா இருந்து, மதுரை மருதனிளநாகனார் உரைத்த விடத்து ஒரோ வழிக் கண்ணீர் வார்த்து மெய்ம்மயிர் நிறுத்திப் பின்னர்க் கணக்காயனார் மகனார் நக்கீரனார் உரைத்த விடத்துப் பதந்தோறுங் கண்ணீர் வார்த்து மெய்ம்மயிர் சிலிர்ப்ப இருந்தான். இருப்ப, ஆர்ப்பெடுத்து மெய்யுரை பெற்றாம் இந்நூற்கென்றார்.
அதனால் உப்பூரிகுடிகிழார் மகனாவான் உருத்திரசன் மனாவான் செய்தது இந்நூற்குரை யென்பாருமுளர்; அவர் செய்திலர், மெய்யுரை கேட்டாரென்க. மதுரை ஆலவாயிற் பெருமானடிகளாற் செய்யப்பட்ட நூற்கு நக்கீரனாரால் உரைகண்டு, குமாரசுவாமியாற் கேட்கப்பட்ட தென்க." (இறையனாரகப் பொருள், முதற் சூத்திர உரைப்பாயிரம்)
இறையனார் அகப்பொருளும் அதன் உரையும் எழுதப் பட்ட வரலாற்றை அறிந்தோம். இனி இவை பற்றி ஆராய்வோம்.