பண்டைத் தமிழக வரலாறு - களப்பிரர்
155
இந்தப் புதியஅகப்பொருள் நூலுக்குச் சங்கப் புலவர் பொருள் கண்டார்களா என்றால் காணவில்லை. தங்களுக்கோர் காரணிகனைத் தரவேண்டும் என்று தவங்கிடந்து சிவபெருமானை வேண்டினார்கள். அவரும் ஒரு காரணிகனைக் காட்டினார். அந்தக் காரணிகனும் ஊமைப்பிள்ளை! இந்தக் காரணிகன், இந்தப் புதிய அகப்பொருளுக்கு நக்கீரர் உரைத்த உரைதான் உண்மையான உரை என்று மெய்ம்மயிர் சிலிர்த்துக் கண்ணீர் வடித்ததன் மூலம் மெய்யுரைக்குச் சான்று தந்தார்.
களவியல் சூத்திரங்களும் அகப்பொருள் சூத்திரங்களும்
மேற்கொண்டு ஆராய்ச்சியைச் செலுத்துவதற்கு முன்பு இறையனார் அகப்பொருள் (களவியல்) சூத்திரங்களைப் பற்றிக் காண்போம். இறையனார் புதிதாகச் செய்து கொடுத்த களவியல் அறுபது சூத்திரங்கள் முழுவதும் புதியவை அல்ல. அவர் தொல்காப்பியத்தி லிருந்தும் சில சூத்திரங்களை எடுத்துத் தம்முடைய புதிய களவியலில் சேர்த்துக்கொண்டார். அவை: (1) தொல். வேற்றுமை. 114 - இறையனார் அகம் 59; (2) தொல். வேற்றுமை 174 - இறையனார் அகம் 54; (3) தொல். கற்பியல் 187 – இறையனார் அகம் 43; (4) தொல். களவியல் 130- இறையனார் அகம் 18; (5) தொல். களவியல் 133 - இறையனார் அகம் 17; (6) தொல். களவியல் 27- இறையனார் அகம் 7.
தொல்காப்பிய அகப்பொருள் இருக்கும்போதே இறையனார் அகப்பொருளைப் புதிதாகச் செய்தார். ஏன்? தொல்காப்பிய அகப்பொருளுக்கும் இறையனார் அகப்பொருளுக்கும் வேறு பொருள்கள் உண்டா? பழைய கருத்துகளுக்குப் பதிலாகப் புதிய கருத்துகள் கூறப்பட்டுள்ளனவா? ஒன்றும் இல்லை.
இறையனார் அகப்பொருளின் காலம்
இறையனார் அகப்பொருளின் உரையாசிரியர் அதனுடைய உரைப்பாயிரத்தில் இந்நூல் இயற்றப்பட்ட காலம் கடைச்சங்கக் காலம் என்று கூறுகிறார். "இனிக் காலமென்பது கடைச் சங்கத்தார் காலத்துச் செய்யப்பட்டது. இனிக் களமென்பது உக்கிரப் பெருவழுதியார் அவைக்களமென்பது. காரணமென்பது அக்காலத்துப் பாண்டியனாருஞ் சங்கத்தாரும் பொருளிலக்கணம் பெறாது இடர்ப்படுவாரைக் கண்டு ஆலவாயிற் பெருமானடிகளால் வெளியிடப்பட்டது” என்று பாயிரம் கூறுகிறது.