பண்டைத் தமிழக வரலாறு - துளு நாடு
191
குட்பட்டிருந்தது. ஆனால், சாகர் என்னும் மேற்கு சத்ராப் அரசர்கள் அப்பகுதிகளைக் கைப்பற்றினார்கள். அவர்கள் கைப்பற்றிய அப்பகுதிகளை சதகர்ணியரசர் போரிட்டு மீட்டுக்கொண்டனர். மறுபடியும் சத்ராப் அரசர் அப்பகுதியைக் கைப்பற்றினர். மீண்டும் அதைச் சதகர்ணியரசர் மீட்டுக் கொண்டனர். இவ்வாறு அவ்வடபகுதி அடிக்கடி சத்ராப் - சதகர்ணியரசரின் போர்க்களமாக இருந்தது. ஆகவே, துளு நாட்டரசருக்கு அக்காலத்தில் வடக்கிலும் கிழக்கிலும் போர் செய்ய வேண்டிய சூழ்நிலை இருக்கவில்லை. தெற்கே சேர அரசருடனும் தென் கிழக்கே வடகொங்கு நாட்டுடனும் அவர்கள் அடிக்கடி போர் செய்ய வேண்டியிருந்தது.
துளு நாட்டரசர்
துளு நாட்டு (கொங்கணத்து) நன்னருடைய வரலாறு சங்க இலக்கியங்களிலிருந்து சிறிது கிடைக்கிறது. கொங்கணத்து அரசர் கொங்கணங் கிழார் என்று பெயர் பெற்றிருந்தனர். துளு நாடு கொங்கணம் என்றும் கொண்கானம் என்றும் கொண் பொருங்காணம் என்றும் கூறப்பட்டது. அவர்கள் குடும்பப் பெயர் நன்னன் என்பது. அவர்கள் நன்னன் வேண்மான் என்றும் கூறப்பட்டனர். நன்னன் குடும்பப் பெண்டிர்‘ நன்னன் வேண்மாள் என்றும் கூறப்பட்டனர் (சிலம்பு, காட்சிக்காதை 5 ஆம் அடி. அரும்பதவுரை காண்க).
கிறிஸ்து சகாப்தத்தின் தொடக்கத்தில் துளு நாட்டை அரசாண்ட நன்ன அரசரைப் பற்றித் தமிழில் சங்க இலக்கியங்களில் மட்டும் கிடைக்கின்றன. வேறு மொழி நூல்களில் இவ்வரலாறுகிடைக்கவில்லை.
நன்னர்களில் மூன்று அரசரைப் பற்றிச் சில செய்திகள் சங்க நூல்களிலிருந்து தெரிகின்றன. அந்த மூன்று அரசரும் கி.பி. 2ஆம் நூற்றாண்டில் இருந்தவர் எனத் தெரிகின்றனர். இவர்களுக்கு முன்பிருந்த நன்னர்களைப் பற்றியும் பின்பு இருந்த நன்னர்களைப் பற்றியும் ஒன்றுந் தெரியவில்லை. இந்த மூன்று நன்னர்களை முதலாம் நன்னன், இரண்டம் நன்னன், மூன்றாம் நன்னன் என்று பெயர் இட்டு ஆராய்வோம்.
முதலாம் நன்னன் (ஏறத்தாழ கி.பி. 100 முதல் 125)
இவன் போரில் சிறந்த வீரனாக இருந்தான். பிண்டன் என்னும் வலிமிக்க சிற்றரசனுடன் போர் செய்து அவனை வென்றான். அந்தப் போர் எங்கு நடந்தது, அந்தப் பிண்டன் என்பவன் யார் என்பன தெரியவில்லை. பரணர் என்னும் புலவர் இச்செய்தியைக் கூறுகிறார்.