224
மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம்-3
தாழை
தாழை என்னுஞ் சொல் கைதை என்னும் தாழைப் புதருக்குப் பெயராக வழங்கப்படுகிறது. சங்க இலக்கியங்களிலே தாழை என்னுஞ் சொல் தென்னை மரத்துக்கும் பெயராக வழங்கப்பட்டிருந்தது. சங்க காலத்துக்குப் பிறகு தென்னை என்னும் பொருளில் தாழை என்னுஞ் சொல் வழக்கிழந்துவிட்டது. திருமுருகாற்றுப்படை, பொருநராற்றுப் படை, பெரும்பாணாற்றுப்படை, குறிஞ்சிப்பாட்டு, நற்றிணை முதலிய சங்க இலக்கியங்களிலே தென்னைமரம், தாழை என்று கூறப்பட்டிருக்கிறது. பிற்காலத்தில் இந்தச் சொல் வழக்கிழந்து போயிற்று. ஆனால் துளுமொழியிலே இச்சொல் இன்றும் வழங்கி வருகிறது. துளு மொழி, பிற்காலத்தில் ழகர எழுத்தை இழந்துவிட்டபடியால், ழகரத்துக்குப் பதிலாக றகர எழுத்தை வழங்குகிறது. எனவே, தாழை என்னும் பழைய சொல் இப்போதைய துளு மொழியில் தாறெ என்று கூறப்படுகிறது. தாறெ என்றால் துளு மொழியில் (தாழை) தென்னை மரம் என்பது பொருள். இதனால் துளு மொழி மிகப் பழைய சொற்களைக் கொண்டிருக்கிறது என்பது தெரிகிறதல்லவா?
அறிவர்
அறிவன், அறிஞர் என்னுஞ் சொற்கள் தொல்காப்பியத்திலும் ஏனைய சங்க இலக்கியத்திலும் பயின்று வருகின்றன. அறிவன், அறிவர் என்னுஞ் சொல்லுக்கு உரை எழுதிய நச்சினார்க்கினியர், இளம்பூரண அடிகள் முதலியோர் முனிவர் என்றும் இருடிகள் என்றும் பொருள் எழுதியுள்ளனர். ஆனால், இவர்கள் கூறும் உரை பொருத்தமாகத் தோன்றவில்லை. அறிவர் என்னும் பெயருள்ளவர் வான சாத்திரத்தையறிந்தவர் என்னும் பொருளே சரியானதென்று தோன்றுகிறது. (சங்க காலத்திலேயே (சங்க காலத்தின் இறுதியில்) அறிவன் என்னுஞ் சொல் மறைத்து கணிவன் என்னுஞ் சொல் வழங்கப்பட்டது.)
அறிவன் என்பது முனிவரையும் ரிஷிகளையுங் குறிக்கிறதா அல்லது மக்கள் சமூகத்தில் வானசாத்திரத்தையறிந்தவரைக் குறிக்கிறதா என்னும் ஐயப்பாடு உண்டாகிறது. அந்த ஐயப்பாட்டைத் தீர்ப்பது போல துளு மொழிச் சொல் உதவி செய்கிறது. துளுவிலும் குடகு மொழியிலும் அறிவர் என்னுஞ் சொல் அருவர் என்று வழங்கப்படுகிறது. அருவர் என்பவர் குடகு நாட்டில் திருமணம் முதலிய சடங்குகளைச் செய்யும் புரோகிதராக இன்றும் இருக்கின்றனர்.