முகவுரை
தமிழ்நாட்டின் வரலாறு முழுமையாகவும் தெளிவாகவும் சரியாகவும் இன்னும் எழுதப்படாமலிருப்பது தமிழரின் பெருங்குறையாகும். தமிழகத்தின் மிக நீண்ட வரலாற்றில் களப்பிரரின் ஆட்சிக்காலம் முக்கியமானது. களப்பிரர் ஆட்சிக்காலம் தமிழ் நாட்டு வரலாற்றில் ‘இருண்ட காலம்' ஆக இருந்து வந்தது. ஒரு காலத்தில் களப்பிரர் தமிழகத்தை அரசாண்டார்கள் என்னும் வரலாற்றுச் செய்தியே நெடுங்காலமாக மறைந்து கிடந்தது. வேள்விக்குடிச் செப்பேடு கிடைத்து, இது வெளியிடப்பட்ட பிறகுதான் களப்பிரர் என்னும் அரசர் இருந்தனர் என்றும் அவர்கள் தமிழகத்தை அரசாண்டனர் என்றும் தெரியவந்தது. அதற்கு முன் அப்படி ஒரு அரசர் பரம்பரை இருந்தது என்பதை அறியாமலே இருந்தோம்.
1920 ஆம் ஆண்டுக்குப் பிறகு வேள்விக்குடிச் செப்பேட்டு வாசகம் வெளிவந்தபிறகு 55 ஆண்டுகளாகத்தான் களப்பிரரைப்பற்றிக் கொஞ்சங்கொஞ்சமாக அறிந்து வருகிறோம். ஐம்பத்தைந்து ஆண்டுகளாகியும் இன்னும் அவர்களைப் பற்றிய முழு வரலாறு தெரியாமலிருக்கிறது. அறிஞர்கள் களப்பிரரைப் பற்றிச் சில கட்டுரைகள் எழுதினார்கள். சில வரலாற்றுப் பேராசிரியர்கள் தங்களுடைய வரலாற்று நூல்களில் களப்பிரரின் ‘இருண்ட காலத்தை' ஒரே வரியில் குறிப்பிட்டுள்ளனர். அவ்வளவுதான்.
களப்பிரர் வரலாறு எழுதப்படாததன் காரணம், அவர்கள் காலத்துக் கல்வெட்டுச் சாசனங்களோ, செப்பேட்டுச் சாசனங்களோ, அவர்கள் காலத்துக் காசுகளோ, வேறு பழம்பொருள் சான்றுகளோ கிடைக்காதது தான். இந்த நிலையில் அவர்களைப் பற்றி அறியக்கூடிய ஒரே சான்று அக்காலத்துச் சமய, இலக்கிய நூல்களேயாகும். இந்தச் சான்றுகளை இதுவரையில் யாரும் அதிகமாகக் கையாளவில்லை. பெரிய புராணமும் யாப்பருங்கல உரை மேற்கோள் செய்யுட்களும் ஓரளவு பயன்படுத்தப்பட்டன. இதுவரை வெளிவந்த களப்பிரரைப் பற்றிய கட்டுரைகளும் அவர்கள் வரலாற்றை ஓரளவே தெரிவிக்கின்றன.