பண்டைத் தமிழக வரலாறு - களப்பிரர், துளு நாடு
24
அக்காலத்தில் இருந்த (சைவ, வைணவ, பௌத்த, சமண) சமயங்களின் வரலாறு, சமய நூல்களின் (பதினோராம் திருமுறை) வரலாறு, செய்யுள் இலக்கண (யாப்பருங்கலம்) வரலாறு ஆகியவற்றைப் பற்றி ஆராய்ந்தபோது களப்பிரர் ஆட்சிக் காலத்தைப் பற்றிச் சில செய்திகள் புதிதாகப் புலனாயின. ஆகவே, இந்நூலை எழுதினேன். களப்பிரர் காலத்தில் நடந்த பல நிகழ்ச்சிகள் இந்த நூலில் இடம் பெற்றுள்ளன என்பதை இந்நூலைப் படிப்பவர் அறிந்துகொள்ளலாம்.
களப்பிரரின் ‘இருண்டகாலம்‘ இந்த நூலினால் ‘விடியற் காலம்’ ஆகிறது. மேலும் புதைபொருள் சான்றுகள், பழங்காலச் சான்றுகள் கிடைக்குமானால் களப்பிரர் வரலாற்றில் பகற் காலத்தைக் காணக்கூடும்.
வாழ்க்கையில் ஏற்பட்ட மனக்கவலையும் துன்பமும் நோயும் தொடர்ந்து வருத்துகிற காலத்தில் இந்நூலை எழுதினேன்.
இந்நூல் வெளிவர முழு முயற்சிகள் எடுத்துக்கொண்ட சென்னைப் பல்கலைக்கழகத் தொல்பொருள் துறை ஆய்வு மாணவர் திரு. ர. ராமசாமி அவர்களுக்கு என் நன்றி உரியதாகும்.
இந்த நூலை அச்சிட்டு வெளியிடும் மக்கள் வெளியீடு நிறுவனத்தைச் சேர்ந்த திரு. மே. து. ராசுகுமார் அவர்களுக்கு என்னுடைய நன்றியைத் தெரிவிக்கக் கடமைப்பட்டுள்ளேன்.
மயிலாப்பூர் மயிலை சீனி. வேங்கடசாமி
சென்னை - 4 20-10-1975