பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 3.pdf/241

இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

பண்டைத் தமிழக வரலாறு - துளு நாடு

241


இந்த வம்பமோரியரின் சந்ததியார் பிற்காலத்திலுங்கூட (கி.பி.6ஆம் நூற்றாண்டில்) சாளுக்கிய அரசர் காலத்தில் இந்தியாவின் மேற்குப் பக்கத்தில் இருந்து அரசாண்டு வந்தனர் என்பது தெரிகின்றது.

மௌரிய ஆட்சிக் காலத்தில், அவர்களின் இராச்சியத்தின் தெற்குப் பகுதியை யரசாண்ட இராசப் பிரதிநிதி சுவர்ணகிரி என்னும் நகரத்தில் இருந்து அரசாண்டார் என்று தெரிகின்றது. சுவர்ணகிரி என்பது, இப்போதுள்ள ஆந்திர தேசத்தில் ராய்ச்சூர் மாவட்டத்தில் உள்ள மாங்கி என்னும் ஊர். இங்கிருந்த மோரிய இராசப் பிரதிநிதி களின் சந்ததியார் பிற்காலத்தில் மோரியர் என்னும் பெயருடன் இருந்தார்கள் போலும். இவர்களைத்தான் இச்சங்கச் செய்யுட்கள் வம்பமோரியர் என்று கூறுகின்றன போலும்.

IV. ஆய் எயினன்

சேரர் சார்பாக அவர்களின் சேனைத் தலைவனான ஆய்எயினன் நன்னனுடன் போர் செய்தான் என்று இந்நூலில் கூறினோம். அவனைப் பற்றிய செய்தியை இங்குக் கூறுவோம்.

இவன் வெளியம் என்னும் ஊரை யாண்ட சிற்றரசன். ஆகவே, இவன் ‘வெளியே வேண்மான் ஆய்எயினன்' (அகம் 208:5) என்று கூறப்படுகிறான். வெளியன் என்பது சேர நாட்டில் இருந்த ஊர் என்பதை 'வானவரம்பன் வெளியம்' (அகம் 359:5) என்பதனால் அறிகிறோம் (வானவரம்பன் - சேர அரசன்). வெளியன் வேண்மான் ஆய் எயினன் சேர அரசர்களின் சேனைத் தலைவன் என்று தெரிகிறான். ஆய்எயினனுக்கு நல்லினி என்னும் பெயருள்ள ஒரு மகள் இருந்தாள். அவளை உதியஞ் சேரல் மணஞ் செய்திருந்தான். இவர்களுக்குப்பிறந்த மகன் இமயவரம்பன் நெடுஞ்சேரலாதன். இதனை,

மன்னிய பெரும்புகழ் மறுவில் வாய்மொழி இன்னிசை முரசின் உதியஞ் சேரற்கு வெளியன் வேண்மான் நல்லினி ஈன்றமகன்

இமயவரம்பன் நெடுஞ்சேரலாதன் என்று பதிற்றுப்பத்து இரண்டாம் பத்துப் பதிகத்தினால் அறிகிறோம்.

எனவே, ஆய்எயினன் மகளாகிய நல்லினி, சேரன் செங்குட்டுவனுக்கும் இளங்கோவடிகளுக்கும் களங்காய்க் கண்ணி நார்முடிச்-