பண்டைத் தமிழக வரலாறு-களப்பிரர்
27
கடைச்சங்க காலத்தின் இறுதியில் பாண்டிய நாட்டையர சாண்டவன் நெடுஞ்செழியன். இந்த நெடுஞ்செழியன், கோவலன் கண்ணகி காலத்திலிருந்த நெடுஞ்செழியன் அல்லன். அவனுக்குப் பிறகு இருந்த நெடுஞ்செழியன். இவனைத் தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியன் என்று வரலாறு கூறுகிறது. இந்த நெடுஞ்செழியன், சேர நாட்டுக் கடற்கரையோரத்தில் பேரியாற்றின் புகுமுகத்தில் இருந்த முசிறிப்பட்டினத்தை முற்றுகைசெய்து அங் கிருந்த ஒரு தெய்வத் திருமேனியை எடுத்துக்கொண்டு மதுரைக்குப் போனான் (அகநானூறு 57: 14-16; 11-14). இவனுடைய சமகாலத்திலிருந்த சேர அரசன் மேற்சொன்ன கோக்கோதைமார்பனே.
கோக்கோதை மார்பன், கணைக்கால் இரும்பொறை, சோழன் செங்கணான், தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியன் ஆகிய இவர்கள் கடைச்சங்க காலத்தின் இறுதியில் சமகாலத்தில் இருந்த அரசர்கள். இவர்களுக்குப் பிறகு இவர்களுடைய மக்கள் அல்லது உறவினர் சேர, கொங்கு, சோழ, பாண்டிய நாடுகளை அரசாண்டார்கள். இவர்களுடைய பெயர்கள் தெரியவில்லை. இவர்கள் காலத்தில் அயல் நாட்டவர் வந்து இவர்களை வென்று தமிழகத்தைக் கைப்பற்றி யரசாண்டார்கள். அவர்கள் களப்பிரர் என்று கூறப் பட்டார்கள். களப்பிரர் தமிழகத்தைக் கைப்பற்றி யரசாண்ட வரலாறு மறைந்து போய் நெடுங்காலமாகப் பல நூற்றாண்டு வரையில் தெரியாமல் இருந்தது. கி. பி. 20ஆம் நூற்றாண்டு வரையில் மறைந்து போயிருந்த களப்பிர அரசரைப் பற்றின வரலாற்றுச் செய்தி, பாண்டியருடைய செப்பேடுகள் கிடைத்த பிறகு அவைகளிலிருந்து தெரியவந்தன. திரு. கே. ஜி. சங்கரன் அவர்கள், வட்டெழுத்தில் எழுதப்பட்ட வேள்விக்குடிச் செப்பேட்டை இக்காலத் தமிழ் எழுத்தில் செந்தமிழ்த் திங்களிதழில் வெளியிட்டார். (செந்தமிழ், 20 ஆம் தொகுதி, பக்கம் 205-216). அதன் பிறகு, இந்திய சாசன இலாகா 1923ஆம் ஆண்டில் எபிகிறாபியா இந்திகா என்னும் ஆங்கில வெளியீட்டில் வேள்விக்குடிச் சாசனத்தை ஆங்கில (இலத்தீன்) எழுத்தில் வெளியிட்டது. (Epigraphia Indica, Vol. XVII, 1923 pp. 291-309). சில ஆண்டுகளுக்குப் பிறகு தளவாய்ப்புரச் சாசனம் கிடைத்ததும் இந்தச் செப்பேடுகளிலிருந்து களப்பிர அரசர்களைப் பற்றி அறிகிறோம் (பாண்டியர் செப்பேடுகள் பத்து, தமிழ் வரலாற்றுக் கழக வெளியீடு, 1967).