பண்டைத் தமிழக வரலாறு - களப்பிரர்
29
களப்பிரர் யார்?
களப்ரர், களப்பரர், களப்பிரர், களப்பாளர், களப்பாழர் என்றெல்லாம் கூறப்படுகிற இவர்களைக் களப்பிரர் என்று கூறுவோம். களப்பிரர் தமிழர் அல்லர். ஆனால், அவர்கள் ஆரியரோ என்றால் ஆரியரும் அல்லர். அவர்கள் வட இந்தியாவில் இருந்து தமிழ் நாட்டுக்கு வந்தவர் என்று திரு. சதாசிவ பண்டாரத்தார் கருதுகிறார். “.. அன்னோர் (களப்பிரர்) பிராகிருதம், பாலி ஆகியவற்றைத் தமக்குரிய மொழிகளாகக் கொண்டு ஆதரித்துள்ளமையால் அம்மரபினர் தமிழர் அல்லர் என்பதும் வடபுலத்தினின்றும் போந்த ஏதிலர் ஆவர் என்பதும் நன்கு தெரியப்படும் என்று அவர் எழுதுகிறார் (பாண்டியர் வரலாறு, 1969, பக். 32). களப்பிரர் சைன மதத்தையும் பௌத்த மதத்தையும் ஆதரித்தனர். இந்த மதங்களின் ‘தெய்வ பாஷை' பிராகிருதம் (சூரசேனியும் பாலி மொழியும்) ஆகையால், இயற்கையாகவே இந்தப் பிராகிருத மொழிகளுக்கு ஆக்கம் ஏற்பட்டது. ஆனால், அவர் களுடைய தாய்மொழி பிராகிருதம் அன்று, கன்னட மொழியே. களப்பிரர் வட இந்தியாவிலிருந்து வந்தவர் அல்லர். அவர்கள் தமிழகத்துக்கு அண்மையில் இருந்த கன்னட வடுகர். எனவே, அவர்கள் திராவிட இனத்தவரே.
களப்பிரரைப் பற்றி ஆராய்ந்த அறிஞர்கள் அவர்களைப் பற்றித் தங்கள்தங்கள் கருத்துகளை எழுதியுள்ளனர். பழந் தமிழகத்தின் வடக்கில் இருந்த வேங்கட நாட்டை அரசாண்ட சிற்றரசர் புல்லி என்று கூறப்படுகின்றனர். 'கள்வர் கோமான் புல்லி' என்று அவர்கள் கூறப்படுகிறார்கள். (அகநானூறு 61 : 11-13). கள்வர் என்பதைக் களவர் என்றும் படிக்கலாம். பழைய ஏட்டுச் சுவடிகளில் புள்ளியிட வேண்டிய எழுத்துக்களுக்குப் புள்ளி இடாமலே எழுதும் வழக்கம் இருந்தது. ஆகவே, இந்தச் சொல் களவர் என்பதா கள்வர் என்பதா என்பதை அறுதியிட்டுக் கூறமுடியவில்லை. இந்தச் சொல்லைக் களவர் என்று கொண்டு திரு. மு. இராகவையங்கார் களவர் என்பது களப்பிரரைக் குறிக்கிறது என்று எழுதினார். (Journal of Indian History, Vol. VII). டாக்டர் எஸ். கிருஷ்ணசாமி அய்யங்காரும் இதே கருத்தைக் கூறியுள்ளார். வேங்கட நாட்டையாண்ட களவர் அல்லது கள்வர்தான் (புல்லி அரசர்) களப்பிரர் என்று இவர் கூறுகிறார். (The Age of Imperial Unity, Vol. II, Bharatiya Vidya Bhavan, 1951, pp. 223-33). இந்த அறிஞர்கள் கூறுவது ஏற்கத் தக்கது.