30
மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம்-3
அன்று. வேங்கட நாட்டிலிருந்த களவர் அல்லது கள்வர் என்பவர் தமிழர். களப்பிரரோ தமிழர் அல்லாத கன்னடர். மற்றும், சங்க காலத்து வேங்கட நாடு தொண்டை மண்டலத்தைச் சேர்ந்து தமிழகத்தின் பகுதியாக இருந்தது. ஆகவே, தமிழராகிய கள்வர் (களவர்) வேறு. கன்னடராகிய களப்பிரராக இவர்கள் இருக்க முடியாது. கள்வர் (களவர்) வேறு, களப்பிரர் வேறு.
பல்லவ அரசர் ஆண்ட தொண்டை மண்டலம் தவிர, சோழ, பாண்டிய, சேர நாடுகளைக் கைப்பற்றி யரசாண்ட களப்பிரர் கருநாட நாட்டுக் கன்னடர் என்பதில் ஐயமில்லை. பாண்டி நாட்டில் இருந்த மூர்த்திநாயனார் காலத்தில் பாண்டி நாட்டை யரசாண்ட மன்னன் கன்னட நாட்டு அரசன் என்று சேக்கிழார் கூறுகிறார். "கானக்கடி சூழ் வடுகக் கருநாடர் மன்னர்” என்று அவர் கூறுகிறார் (திருத்தொண்டர் புராணம், மூர்த்திநாயனார் புராணம் 11, 24). 'வடுகக் கருநாடர் மன்னன்' என்பதன் பொருள் வடுக நாடாகிய கன்னட நாட்டைச் சேர்ந்த அரசன் என்பது பிற்காலத்து நூலாகிய கல்லாடம் ‘மதுரை வவ்விய கருநடர் வேந்தன்' என்று கூறுகிறது (கல்லாடம், செய்யுள் 56). கன்னட நாட்டை அக்காலத்தில் ஒரே அரசன் ஆட்சி செய்யவில்லை. வெவ்வேறு பகுதிகளை வெவ்வேறு அரசர் ஆண்டனர். கருநாடர் மன்னர், கன்னட நாட்டில் எந்த ஊரையரசாண்டவன் என்பதைப் பெரியபுராணமும் கல்லாடமும் கூறவில்லை. அவர்கள் கன்னட தேசத்தில் களபப்பு என்னும் நாட்டையாண்ட சிற்றரசர் என்பது கன்னட நாட்டுக் கல்வெட்டு களிலிருந்தும் கன்னட நூலிலிருந்தும் தெரிகிறது. சந்திரகுப்த மௌரியன் (அசோகச் சக்கரவர்த்தியின் பாட்டன்) அரசாட்சியைத் துறந்து சைன சமயத்தைச் சார்ந்து பத்திரபாகு முனிவருடனும் அவரைச் சார்ந்த சமண சமயத் துறவிகளுடனும் தென்னாட்டுக்கு வந்து களபப்பு நாட்டில் உள்ள களபப்பு மலையில் தங்கினார்கள் என்று சமண சமய நூலாகிய வட்டாராதனே என்னும் நூல் கூறுகிறது. அவர்கள் கழ்ப்பு நாட்டுக்கு வந்தார்கள் என்று இந்நூல் கூறுகிறது. (வட்டாராதனெ, பத்ரபாஹூ பட்டாரா கெதெ). கழ்பப்பு என்பதும் கள்பப்பு என்பதும் ஒன்றே. கழ்பப்பு (களபப்பு) என்பதைச் சமஸ்கிருதத்தில் கடவப்ர என்று கூறினார்கள். இப்போதைய சிரவண பௌகொள என்னும் பிரதேசமே பழங்காலத்தில் கள்பப்பு நாடு என்று பெயர் பெற்றிருந்தது (கன்னட ஸாஸனகள் ஸாம்ஸ்கிருதிக அத்யயன, கி. பி. 450-1150, டாக்டர் எம். சிதானந்த மூர்த்தி, 1966, பக்கம் 70, 78). களபப்பு நாட்டில் உள்ள சத்திரகிரி