பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 3.pdf/37

இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

பண்டைத் தமிழக வரலாறு - களப்பிரர், துளு நாடு

37


'அலைகடற் கதிர்முத்தம்' என்று தொடங்கும் இன்னொரு செய்யுள், களப்பிர அரசன் சங்கு சக்கரம் ஏந்திய திருமாலை வழிபட்டு அவன் அருளினால் பெரிய நிலத்தை ஆளும் பேறுபெற்றான் என்றும் அந்த அரசனை அருகக் கடவுள் காத்தருளவேண்டும் என்று தொடங்குகிற இன்னொரு செய்யுள் ஒரு களப்பிர அரசனுடைய ஆற்றல், கொற்றம், வீரம் முதலியவற்றைப் புகழ்கிறது. அதில் அந்தக் களப்பிர அரசன் ‘அச்சுதர்கோ' என்று கூறப்படுகிறான். அதாவது, அச்சுத குலத்தில் பிறந்த அரசன் என்று கூறப்படுகிறான்.

'நலங்கிளர் திருமணியும்' என்று தொடங்குகிற இன்னொரு செய்யுள், செங்கோல் விண்ணவன் (விண்ணவன் - விஷ்ணு) என்றும் களப்பிர அரசனுடைய ஆட்சி ஓங்கவேண்டும் என்றும் அருகக் கடவுளை வேண்டுகிறது. விண்ணவன் (விண்ணு - விஷ்ணு) என்று பெயர் பெற்றிருப்பதனால் இவ்வரசன் வைணவ சமயத்தவன் என்று தெரிகிறான். சேர, சோழ, பாண்டியர் களப்பிர அரசனைப் பாடிய பாடல்களில் களப்பிரன் அச்சுதன் என்று கூறப்பட்டதை முன்னமே கண்டோம்.

கி. பி. 5ஆம் நூற்றாண்டின் முற்பாதியில் வாழ்ந்திருந்த ஆசாரிய புத்ததத்ததேரர் சோழ நாட்டுத் தமிழர். அவர் பேர் போன பௌத்தப் பெரியார். அவர் பாலி மொழியில் புத்தவம் சாட்டகதா, அபிதம்மாவதாரம், வினயவினிச்சயம், உத்தரவினிச்சயம், ரூபாரூபவிபாகம், ஜினாலங்காரம் முதலான நூல்களை எழுதியுள்ளார். சோழ நாட்டுப் பூத மங்கலம் என்னும் ஊரில் வேணுதாசர் கட்டின பௌத்த விகாரையில் இவர் தங்கியிருந்த போது வினயவினிச்சயம் என்னும் நூலை களம்ப (களப்ர) அரசன் காலத்தில் இவர் எழுதி முடித்ததாக இவர் அந்த நூலில் கூறியுள்ளார் ('Contemporary Buddha Gosha' A. P. Buddha Datta, University of Ceylon Review, 1945, Vol. III, No. 1, pp. 34-70).

பஸாத ஜனனே ரம்மே பாஸாதே வஸதா மயா
புத்தஸ்ஸ புத்தஸீஹேன வினயஸ்ஸ வனிச்சயோ
புத்தஸீஹம் ஸமுத்திஸ்ஸ மம ஸத்தி விஹாரிம்
கதோ யம் பன பிக்கூனம் ஹிதத்தாய ஸமாஸதோ
வியைஸ்ஸாவ பொத்தந்தம் ஸுகேனே வாசிரேன ச
அச்சுதச்சுத விக்கந்தே களப்ப குலநந்தனே
மஹிம் ஸமனு ஸாஸந்தே ஆர்த்தோ ச ஸமாபிதோ

இதில் அச்சுத விக்கந்தன் களப்ப (களப்பிர) குலத்தில் பிறந்தவன் என்று கூறப்படுகிறான்.