பண்டைத் தமிழக வரலாறு - களப்பிரர்
43
ஏழாயிரம் சோழர்களின் ஆட்சியில் இருந்தபடியால் அந்த நாடு சோழ நாடு என்றும் கூறப்பட்டது.
சீன தேசத்திலிருந்து பாரத தேசத்துக்கு வந்து பல நாடுகளைச் சுற்றிப் பார்த்த யுவான் சுவாங் என்னும் பௌத்தன் தன்னுடைய யாத்திரைக் குறிப்பில் இரேணாட்டை சு-லி-ய என்று எழுதியுள்ளார். சு-லி-ய என்பது சோழிய அல்லது சோழ என்னும் சொல்லின் திரிபு. பாரத நாட்டில் தல யாத்திரை செய்த யுவான் சுவாங் ஆந்திர நாட்டில் அமராவதி நகரத்தில் சில காலம் தங்கியிருந்து, பிறகு தெற்கே யாத்திரை செய்து தொண்டை மண்டலத்தில் காஞ்சிபுரத்துக்கு வந்து தங்கினார். கி. பி. 639-40ஆம் ஆண்டில் இவர் அமராவதியிலும் காஞ்சியிலும் தங்கியிருந்தார். அமராவதியிலிருந்து காஞ்சிபுரத்துக்கு வந்த போது இடைவழியில் சுலிய (சோழ) நாடு இருந்தது என்று இவர் தம்முடைய யாத்திரைக் குறிப்பில் எழுதியுள்ளார்.
தொண்டை நாட்டுக்குத் தெற்கே காவிரியாறு பாய்கிற சோழ நாடு இருக்கிறது என்பதை அறிவோம். ஆனால், சீனராகிய யுவான் சுவாங், தொண்டை நாட்டுக்கு வடக்கே சோழ நாடு இருந்தது என்று எழுதியுள்ளார். இவர் கூறுவது தவறாக இருக்குமோ என்னும் ஐயம் இருந்தது. ஆனால், அண்மைக் காலத்தில் தெலுங்கு நாட்டில் கடப்பை மாவட்டத்தில் கிடைத்த கல்வெட்டுகளும் செப்பேடுகளும் அந்தப் பகுதி நாட்டைச் சோழ குலத்து மன்னர் அரசாண்டனர் என்னும் வரலாற்றுச் செய்தியைக் கூறுகின்றன. எனவே, தொண்டை நாட்டுக்கு வடக்கே சோழ நாடு இருந்தது என்று யுவான் சுவாங் கூறியுள்ளது தவறு அன்று என்பதும் உண்மையான செய்தி என்றும் தெரிகின்றது. அவர் சு-லி-ய என்று கூறுவது இரேணாட்டையாகும். தமிழ்நாட்டின் வட எல்லையில் இருந்த திருவேங்கடக் கோட்டத்துக்கு (வேங்கட மலைக்கு) வட மேற்கேயுள்ள இப்போதைய கடப்பை, கர்னூல் மாவட்டங்களே அக் காலத்தில் இரேணாடு என்றும் சோழநாடு என்றும் பெயர் பெற்றிருந்தது என்பதையறிகிறோம். இரேணாட்டைச் சோழ அரசர் பரம்பரையார் அரசாண்டனர் என்னும் வரலாறு அண்மைக் காலம் வரையில் தெரியாமல் மறைந்திருந்தது.
இரேணாட்டுச் சோழர் தங்களுடைய சாசனங்களிலே தங்களைச் சோழன் கரிகாலனுடைய பரம்பரையில் வந்தவர் என்று கூறுகிற படியினாலே, கரிகாற் சோழன் காலத்திலிருந்து இரேணாட்டைச் சோழர்