பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 3.pdf/45

இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

பண்டைத் தமிழக வரலாறு - களப்பிரர்

45


கல்லின் மேற்புறத்தில் சாசன எழுத்துக்கு மேலே, வாலைச் சுருட்டிக் கொண்டு நிற்கிற புலியின் உருவம் பொறிக்கப்பட்டிருக்கிறது (406 டிக 1904). புலியின் உருவம் சோழருடைய அடையாளக் குறி என்பதையறிவோம். இரேணாட்டுச் சோழரும் புலியின் அடையாளத்தைக் கொண்டிருந்தபடியால் இவர்கள் சோழர் குலத்தவர் என்பது தெளிவாகிறது.

கடப்பை மாவட்டம் ஜம்மலமடுகு தாலுக்காவில் பெத்த முடியம் என்னும் ஊரில் சிதைந்து போன கல் எழுத்துச் சாசனம் காணப்படுகிறது. இந்தச் சாசனத்தில் சோழ மகாராசன் என்னும் பெயர் காணப்படுகிறது. சாசனக் கல்லின் மேற்புறத்தில் புலியின் உருவம் பொறிக்கப்பட்டிருக்கிறது. இந்தப் புலி வாயைத் திறந்து கொண்டு (உறுமிக் கொண்டு) நிற்பதுபோலக் காணப்படுகிறது (351 of 1905). இந்த மாவட்டத்தில் சமயபுரம் தாலுகாவில் சிலம்கூர் என்னும் ஊரில் ஒரு வயலில் உடைந்து கிடக்கிற கற்றூணில் தெலுங்கு எழுத்துச் சாசனங்கள் காணப்படுகின்றன. இதில் சோளமஹாதேவுலு (சோழ மகாதேவர்) என்னும் பெயர் காணப்படுகிறது (396 of 1904). இவ்வூர் அகத்தீஸ்வரர் கோவிலின் முன்புறத்தில் விழுந்து கிடக்கிற கற்றூணில் மூன்று பக்கங்களில் தெலுங்கு எழுத்துச் சாசனம் எழுதப்பட்டுள்ளது. இச் சாசனத்தில் விக்கிரமாதித்திய சோள மஹாராஜூலு எளஞ்சோள மஹா தேவி (இளஞ்சோழ மகாதேவி) என்னும் சோழ அரச அரசியரின் பெயர்கள் காணப்படுகின்றன (400 of 1904). கலமள்ள என்னும் ஊரில் உள்ள சென்னகேசவ கோவிலின் முற்றத்தில் உடைந்து கிடக்கிற கற்றூணில் இரண்டு பக்கங்களில் தெலுங்கு எழுத்துச் சாசனம் காணப் படுகிறது. இதில் இரேணாட்டு அரசன் தனஞ்சயேண்டு என்பவன் பெயர் காணப்படுகிறது (380 of 1904).

கடப்பை மாவட்டம் கமலபுரம் தாலுக்கா மலெபாடு என்னும் ஊருக்கு மேற்கேயுள்ள கிணற்றின் அருகில் கிடக்கிற கற்றூணில் இரேணாட்டுச் சோழ அரசர்கள் சாசனம் எழுதப்பட்டுள்ளது. சித்தி ஆயிரம், இரேணாடு, ஏழாயிரம் ஆகிய நாடுகளை அரசாண்ட சக்தி கோமார விக்கிரமாதித்தியனின் மகனான சோள மகாராஜாதிராஜ விக்கிரமாதித்திய சத்யாதிதுன்று என்னும் அரசன் நிலங்களைத் தானங் கொடுத்ததை இந்தச் சாசனம் கூறுகிறது (399 of 1904). மலெபாடு என்னும் இந்த ஊரிலேயே 1905ஆம் ஆண்டில் இரேணாட்டுச் சோழன் புண்ணிய குமாரனுடைய செப்பேட்டுச் சாசனம் கிடைத்துள்ளது.