46
மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம்-3
இந்தச் செப்பேட்டுச் சாசனம் எபிகிறாபியா இந்திகா என்னும் சஞ்சிகை யின் பதினொன்றாம் தொகுதியில் திரு. கிருஷ்ணசாஸ்திரியால் வெளியிடப்பட்டுள்ளது (Epigraphia Indica, Vol. XI, pp. 337-46). இரணிய இராஷ்ட்ரத்தில் சுப்ரயோக ஆற்றின் தென்கரையில் உள்ள பிரிபாறு என்னும் கிராமத்தில் சில நிலங்களைப் போர்முகராமன் புருஷசார்த்துல புண்ணிய குமாரன் என்னும் அரசன் தானங்கொடுத்ததை இந்தச் செப்பேடு கூறுகிறது. இந்தப் புண்ணிய குமாரனுக்கு மார்த்த வசித்தன், மதனவிலாசன் என்னும் சிறப்புப் பெயர்களும் இருந்தன. இவன், சூரிய குலத்தில் பிறந்த கரிகாலச் சோழனுடைய பரம்பரையில் வந்த சோள மகாராசனுடைய மகன் என்றும் தனஞ்சயவர்மனுடைய பேரன் என்றும் நந்திவர்மனுடைய இரண்டாம் பேரன் என்றும் தன்னை இச்செப்பேட்டில் கூறிக்கொள்கிறான். இந்தச் சாசனம் கி. பி. 8ஆம் நூற்றாண்டில் எழுதப்பட்டது. இந்தச் செப்பேட்டின் தலைப்பில் புலியின் உருவம் எழுதப்பட்டிருக்கிறது. இதைக் கிருஷ்ணசாஸ்திரி சிங்கம் என்று கூறுகிறார். திரு. வெங்கையா அவர்கள் இது புலி என்று கூறுகிறார். சோழர்களுக்குப் புலி அடையாளக் குறியாக இருந்தது. சில கல்வெட்டுச் சாசனங்களிலும் புலியின் உருவம் பொறிக்கப்பட்டுள்ளதை முன்னமே காட்டினோம்.
நன்னிச் சேடன் (நன்னிச்சோழன்) என்னும் பெயருள்ள இரேணாட்டு அரசன் ஒருவன் தெலுங்கு மொழியில் குமார சம்பவம் என்னும் சிறந்த செய்யுள் இலக்கியத்தை எழுதியுள்ளான். அது மிகச் சிறந்த தெலுங்கு இலக்கியமாகப் புகழப்படுகிறது. இந்த நூலில் இந்த அரசன் தன்னுடைய சோழர் குலத்தைக் கூறுகிறான். தான், கரிகால் சோழனுடைய பரம்பரையைச் சேர்ந்தவன் என்றும், உறையூர் சோழ மரபைச் சேர்ந்தவன் என்றும் கூறிக் கொள்கிறான். கற்கோழி கூவிற்று என்றும் கூறுகிறான். உறையூருக்குக் கோழி என்றும் பெயருண்டு. உறையூரில் கோழிச் சேவல் ஒன்று யானையோடு போர் செய்து வென்ற படியால் உறையூருக்குக் கோழி (கோழியூர்) என்று பெயர் வந்தது என்றும் கூறுவர். ஆனால், கல்லினால் செய்யப்பட்ட கோழி கூவிற்று என்று கூறுவது வியப்பாக இருக்கிறது. இந்தக் குமாரசம்பவம் என்னும் நூலில் பல தமிழ்ச் சொற்கள் உள்ளன என்றும் அச்சொற்களின் பொருள் விளங்கவில்லை என்றும் கூறுகின்றனர். தெலுங்குச் சோழர்களின் கல்வெட்டுக்கள் எல்லாவற்றையும் இங்குக் கூறவேண்டுவதில்லை.