பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 3.pdf/49

இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

பண்டைத் தமிழக வரலாறு - களப்பிரர்

49


இராச்சியத்தோடு இணைத்துக் கொண்டான். இந்தப் பல்லவ - களப்பிரப் போரில் இரேணாட்டுத் தனஞ்சயவர்மன் சிம்மவிஷ்ணுப் பல்லவனுக்கு உதவியாக இருந்திருக்கக்கூடும் என்று எண்ணத் தோன்றுகிறது. ஒரு வேளை இந்தப் போரில் தனஞ்சயவர்மன் போர்க்களத்தில் இறந்திருக்க கூடுமோ என்று எண்ணத் தோன்றுகிறது. இரேணாட்டுச் சோழன் தனஞ்சயவர்மன் தன்னுடைய மகனுக்கு மகேந்திர விக்ரமன் என்று, முதலாம் மகேந்திர விக்கிரமவர்மனின் பெயரைச் சூட்டினான்.

இரேணாட்டுச் சோழன் மகேந்திர விக்கிரமன் ஆட்சிக் காலத்தில் மேலைச் சளுக்கிய அரசனான புலிகேசி (இரண்டாம் புலிகேசி) மகேந்திரவர்மப் பல்லவன் மேல் படையெடுத்து வந்து அடிக்கடி தொண்டை நாட்டில் போர்செய்தான். அந்தக் காலத்தில் புலிகேசியின் கை ஓங்கியிருந்தபடியால், இரேணாட்டு மகேந்திரவிக்கிரம சோழன், பல்லவர் சார்பை விட்டுச் சளுக்கியர் சார்பைச் சேரவேண்டிய நிலை ஏற்பட்டது. ஆகவே, அவன் பல்லவ அரசர் சார்பிலிருந்து நீங்கிச் சளுக்கியரைச் சார்ந்தான் என்று அறிகிறோம். இவனுடைய பேரனுக்கு இவன் விக்கிரமாதித்தன் என்று சளுக்கிய அரசனுடைய பெயரைச் சூட்டியிருப்பதிலிருந்து இதனை யறியலாம்.

இரேணாட்டை யரசாண்ட முதல் ஐந்து சோழர்கள் களப்பிரர் ஆட்சிக் காலத்தில் தெலுங்கு நாட்டை யரசாண்டார்கள். இவர்கள் ஏறத்தாழ கி. பி. 475 முதல் 575 வரையில் அரசாண்டார்கள். பல்லவ சிம்ம விஷ்ணு களப்பிரரை வென்று சோழ நாட்டைக் கைப்பற்றிக் கொண்ட காலத்தில், பாண்டியன் கடுங்கோன் களப்பிரரை வென்று பாண்டி நாட்டைக் கைப்பற்றிப் பாண்டியர் ஆட்சியை நிலைநாட்டினான் என்பதை வேள்விக்குடிச் செப்பேட்டிலிருந்து அறிகிறோம். களப்பிரர் ஆட்சிக் காலத்தில் சோழநாட்டுச் சோழரில் ஒரு கிளை இரேணாட்டில் அரசாட்சி செய்து கொண்டிருந்தபோது, சோழ நாட்டுச் சோழ பரம்பரையார் சோழ நாட்டிலேயே சில ஊர்களைக் களப்பிரருக்குக் கீழடங்கி அரசாண்டார்கள். பாண்டியன் கடுங்கோன் களப்பிரரை வென்று பாண்டி நாட்டை மீட்டுக்கொண்ட போது சோழர் களப்பிரரை வென்று தங்கள் சோழநாட்டை மீட்டுக் கொள்ளவில்லை. களப்பிரருடன் போர் செய்து சோழநாட்டைக் கைப்பற்றியவன் சிம்ம விஷ்ணு பல்லவன். ஆகவே, களப்பிரருக்குக் கீழடங்கியிருந்த சோழர், சிம்மவிஷ்ணு சோழநாட்டை வென்ற பிறகு பல்லவருக்குக் கீழடங்கிவிட்டனர்.