பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 3.pdf/64

இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

64

மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம்-3



தேர்ந்த சேனைத் தலைவர்கள் என்று தோன்றுகிறது. மொக்கல்லானன் சேனையோடு வந்து கஸ்ஸபனோடு போர் செய்தான். போரில் கஸ்ஸபன் தோல்வியடையும் நிலை ஏற்பட்டபோது அவன் தன்னுடைய யானை மேல் இருந்தபடியே வாளால் குத்திக் கொண்டு தற்கொலை செய்துகொண்டான். மொகல்லானன் ஆட்சியைக் கைப்பற்றினான் (சூலவம்சம் 39 ஆம் பரிச்சேதம் 1 – 28)

கஸ்ஸபனுடைய காலத்தை ஒருவாறு நிச்சயிக்கலாம். இவன் சீனநாட்டு அரசனுக்கு எழுதின திருமுகம் கி. பி. 572இல் போய்ச் சேர்ந்தது என்று தெரிகிறபடியால் இவன் அந்த ஆண்டில் வாழ்ந்திருக்கிறான் என்பது தெரிகிறது (J.R.A.S. Ceylon Branch, XXIV, p. 85).

மொக்கல்லானன் II (கி. பி. 497 - 515)

கஸ்ஸபனுக்குப் பிறகு மொக்கல்லானன் அரசாண்டான். இவன், கஸ்ஸபனால் துரத்தப்பட்டுத் தமிழ்நாட்டுக்குப் போய் அடைக்கலம் புகுந்தான் என்பதை அறிந்தோம். கஸ்ஸபனுடைய பதினெட்டாம் ஆட்சியாண்டில் மொக்கல்லானன் என்னும் வீர மன்னன் நிகந்தர்களின் செய்தியறிந்து பன்னிரண்டு வீரர்களான நண்பர்களோடு ஜம்புத் தீவிலிருந்து (தமிழ்நாட்டிலிருந்து) இங்கே (இலங்கைக்கு) வந்தான் என்று சூலவம்சம் கூறுகிறது (சூலவம்சம் 39ஆம் பரிச்சேதம் 20). நிகந்தர் என்பது இங்குக் களப்பிரரைக் குறிக்கிறது. நிகந்தர் என்றால் சமணர் அல்லது ஜைனர் என்று சூலவம்சம் கூறுகிறது. எனவே, மொக்கல்லானன் தமிழ்நாட்டிலிருந்தும் களப்பிர அரசரின் உதவி பெற்று இலங்கைக்குப் போனான் என்பது தெரிகிறது.

மொக்கல்லானன் அரசனானவுடனே தன்னுடைய தந்தையான தாதுசேனனைக் கொல்வதற்குக் கஸ்ஸபனோடு உதவியாக இருந்த ஆயிரம் பேரைக் கொன்றுவிட்டான். மற்றும் அவனுக்கு உதவியாக இருந்த பலரைப் பிடித்து அவர்களுடைய காதையும் மூக்கையும் அரிந்து அவர்களை நாடுகடத்திவிட்டான். தமிழ்நாட்டிலிருந்து இலங்கை மேல் போர் செய்யப் படையெடுத்து வருவார்கள் என அஞ்சி இவ்வரசன் இலங்கையின் மேற்குக் கடற்கரையோரங்களில் ஆங்காங்கே பாதுகாப்புகளை அமைத்தான். மொக்கல்லானன் பதினெட்டு யாண்டு அரசாண்டான் (சூலவம்சம் 39ஆம் பரிச்சேதம் 29 - 58).