பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 3.pdf/79

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பண்டைத் தமிழக வரலாறு - களப்பிரர்

79


கிழானற் கொற்றன் கொண்ட வேள்வி முற்றுவிக்க கேள்வி அந்தணாளர் முன்பு கேட்க என்றெடுத்துரைத்து வேள்விசாலை முன்பு நின்று வேள்விக்குடி என்றப் பதியைச் சீரோடு திருவளரச் செய்தார். வேந்தனப் பொழுதேய் நீரோடட்டிக் கொடுத்தமையால் நீடுபுக்தி துய்த்த பின் னளவரிய ஆதிராஜரை அகல நீக்கி அகலிடத்தைக் களப்ரனென்னும் கலியரைசன் கைக் கொண்டதனை இறக்கிய பின் ..." (பாண்டியர் செப்பேடுகள் பத்து, வேள்விக்குடிச் செப்பேடு 31-40).

“அங்கொருநாண் மாடமாமதிற் கூடற்பாடு நின்றவர் ஆக்ரோதிக்கக் கொற்றனேய் மற்றவரைத் தெற்றென நன்கு கூவி ‘என்னேய் நுங்குறை' என்று முன்னாகப் பணித்தருள ‘மேனாணின் குரவராற் பான்முறையின் வழுவாமை மாகந்தோய் மலர்ச் சோலைப்பாகனூர்க் கூற்றத்துப் படுவது, ஆள்வ தானை அடல் வேந்தாய்! வேள்விக்குடி என்னும் பியர் உடையது ஒல்காத வேற்றானை ஓடோதவேலி உடன் காத்த பல்யாக முதுகுடுமிப் பெருவழுதி என்னும் பரமேச்வரனால் வேள்விக்குடி என்னப்பட்டது.கேள்வியாற்றரப் பட்டதனை துளக்கமில்லாக் கடற்றானை யாய் களப்ர ராலிறக்கப்பட்டது என்று நின்றவன் விஞ்ஞாப்யஞ் செய்ய... ...” (வேள்விக்குடிச் செப்பேடு, வரி 104-112)

களப்பிரர், வேள்விக்குடி தானத்தை இறக்கினார்கள் என்று செப்பேடு கூறுவது உண்மைதான். ஆனால், அதன் காரணம் பார்ப்பனர் மாட்டுப் பகையன்று. அதற்கு வேறு ஏதோ காரணம் இருக்கவேண்டும் என்று தோன்றுகிறது. களப்பிரர் பிராமணருக்குப் பகைவர் அல்லர். களப்பிரர் பிராமணருக்குத் தானங்கொடுத்து ஆதரித்ததை அகலிடமும் அமருலகும்' எனத் தொடங்குகிற செய்யுள் (இணைப்பு 1 காண்க) கூறுகிறது.

பொருகடல் வளாகம் ஒரு குடை நிழற்றி
இருபிறப் பாளர்க் கிருநிதி ஈந்து
மனமகிழ்ந்து
அருள்புரி பெரும் அச்சுதர் கோவே

என்று அந்தச் செய்யுள் கூறுவது காண்க. இதனால் களப்பிரர் பார்ப்பனரை வெறுத்தவர் அல்லர் என்பது தெரிகிறது.