பண்டைத் தமிழக வரலாறு - களப்பிரர்
83
கூறினோம் (மயிலை சீனிவேங்கடசாமி, பௌத்தமும் தமிழும்) பௌத்தப் பிக்குகள் நாடெங்கும் பிரசாரஞ் செய்து பௌத்த மதத்தை வளர்த்தார்கள். ஆகவே, பௌத்த மதம் பையப்பைய வளர்ந்து தமிழ் நாட்டில் சிறப்படைந்து, களப்பிரர் ஆட்சிக்காலத்தில் பௌத்தம் தமிழ் நாட்டில் மேலும் பரவி வளர்ந்தது. தமிழகத்துக்குப் பக்கத்தில் உள்ள இலங்கையிலும் பௌத்த மதம் பரவியிருந்தபடியால் அதன் காரணமாகவும் பெளத்தம் வலிவு பெற்றிருந்தது.
திருநாவுக்கரசரும் திருஞானசம்பந்தரும் தங்களுடைய தேவாரப் பாடல்களில் பிண்டியர் போதியரையும் சாக்கியர் சமணரையும் கூறுகிறார்கள் (பிண்டியர்-சமணர், போதியர்- பௌத்தர், சாக்கியர்- பௌத்தர், சமணர்-ஜைனர்). தேவார காலத்துக்கு முன் (கி.பி. 7ஆம் நூற்றாண்டுக்கு முன்பு) களப்பிரர் காலத்தில் சமண சமயத்தைப் போலவே பௌத்த மதமும் செழித்திருந்தது. களப்பிரர் காலத்தில் இருந்த பௌத்தர்களின் ஊர்கள் சில தெரிகின்றன. காவிரிப்பூம்பட்டினம், உறையூர் (உரகபுரம்), பூதமங்கலம், சங்கமங்கை, நாகைப் பட்டினம், மயூர பட்டணம், மதுரை, பாண்டி நாட்டுத் தஞ்சை, காஞ்சிபுரம் முதலான ஊர்கள் பௌத்த மதம் வேரூன்றியிருந்த ஊர்களாகும்.
சாக்கிய நாயனார்
திருத்தொண்டர் புராணத்தில் (பெரியபுராணத்தில்) சாக்கிய நாயனார் புராணமும் ஒன்று. சாக்கிய நாயனார் பௌத்த மதத்தவர் (சாக்கியம்-பௌத்தம்). இவர் பழைய சிவனடியார்களில் ஒருவர். பௌத்தராக இருந்துகொண்டே சிவனை வழிபட்டவர். கி.பி. 7ஆம் நூற்றாண்டில் வாழ்ந்திருந்த திருநாவுக்கரசருக்குச் சில நூற்றாண்டு களுக்கு முன் இருந்தவர். சாக்கிய நாயனார், தொண்டை நாட்டில் சங்கமங்கை என்னும் ஊரில் பிறந்தார். பிறகு காஞ்சிபுரத்துக்குப் போய் அங்கு அக்காலத்தில் பேர்போன பௌத்த ஆசிரியர்களிடம் சென்று சமயக்கல்வி பயின்றார். வயது வந்த பிறகு துறவு பூண்ட இவர் ஆடையணிந்து பௌத்தப் பிக்கு ஆனார் (சாக்கியநாயனார் புராணம் 2,3,4). சில காலஞ்சென்ற பிறகு சைவ சமயத்தை மேற்கொண்டார். சிவலிங்க வழிபாடலைச் செய்ய எண்ணினார். ஆனால், அக்காலத்தில் பௌத்த மதம் பலமாக இருந்தபடியால், வெளிப்படையாகப் பௌத்த மதத்தை விட்டுச் சைவ சமயத்திற்கு வர இயலாமற்போயிற்று. சிவலிங்கப் பூசை செய்த பிறகு உணவுகொள்ள வேண்டும் என்று அவர் உறுதிகொண்டார்.