பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 4.pdf/110

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பண்டைத் தமிழகம் - வணிகம், நகரங்கள் மற்றும் பண்பாடு

109


(புறம், 736 : 14), ‘மகிழ்தரல் மரபின் மட்டு’ (புறம் 390 : 16) என்று சங்கச் செய்யுட்கள் மது பானங்களைப் புகழ்கின்றன.

தென்னை பனை மரங்களிலிருந்து கள் இறக்கப்பட்டது. நெல், தினை முதலான தானியங்களிலிருந்து மது வகைகள் உண்டாக்கப்பட்டன. ‘கொழு மடல் தெங்கின் விளைபூந்தேறல்’ (மணி, 3:89) என்று தென்னங்கள் கூறுப்படுகின்றது. ‘இரும்பனம் தீம்பிழி’ (நற்.38:3) என்றும், பிணர்ப்பெண்ணைப் பிழி (பட்டினப், 89) என்றும், நுளை மகள் அரித்த பழம்படு தேறல் (சிறுபாண், 58) என்றும், இரும்பனம் தீம்பிழியுண்போர் மகிழும் (நற் 38.8) என்றும் பனங்கள் கூறப்படுகின்றது.

நெல், தினை முதலான தானியங்களிலிருந்தும் மதுபானங்கள் உண்டாக்கப்பட்டன. இவற்றிற்குத் தோப்பிக்கள் என்று பெயர் கூறப்பட்டது. இவற்றை வீடுகளில் காய்ச்சினார்கள். ‘இல்லடு கள்ளின் தோப்பி’ (பெரும்பாண். 142) ‘துகளற விளைந்த தோப்பி’ (அகம், 205) சாடிகளில் தோப்பிக்கள் காய்ச்சப்பட்டன. வல்வாய்ச் சாடியின் வழைச்சற விளைந்த வெந்நீரரியல் விரலலை நறும்பிழி (பெரும்பாண். 281) என்று கூறப்படுகின்றது. ‘தினைக் கள் உண்ட தெளிகோல் மறவர்’ (அகம், 284:8) என்று தினையரிசிக் கள் கூறப்படுகின்றது.

மலைநாடுகளில் இருந்த குறவர் அங்குக் கிடைத்த பொருள்களிலிருந்து மதுவை உண்டாக்கிக் கொண்டார்கள். மலையுச்சியில் மலைப்பாறைகளில் மலைத்தேன் கிடைத்தது. மலைகளிலும் மலைச்சாரல்களிலும் பலா மரங்களும் பலாப்பழங்களும் கிடைத்தன. மலைகளில் மூங்கில் புதர்கள் வளர்ந்தன. குறவர் பலாச்சுளைகளிலிருந்து ஒரு வகையான மதுபானத்தை உண்டாக்கினார்கள். ‘தீம்பழப் பலவின் சுளைவிளை தேறல்’ (அகம், 128:3, 182:3) மூங்கிற் குழாய்களில் மலைத் தேனைப் பெய்து வாயை யடைத்து நிலத்தில் புதைத்து வைத்து ஒருவித மதுபானத்தை யுண்டாக்கினார்கள். ‘வேய்பெயல் விளையுள் தேக்கட்டேறல் குறைவின்றிப் பருகி நறவு மகிழ்ந்து.’ (மலைபடு கடாம் 171-172) (வேய்-மூங்கில்) ‘திருந்தமை விளைந்த தேக்கட்டேறல்’ (அமை-மூங்கில்) (மலைபடு, 523), ‘நிலம் புதைப் பழுநிய மட்டின் தேறல்’ (புறம், 120 : 12), 'வாங்கு அமைப் பழுநிய தேறல், (புறம், 129:2) (அமை-மூங்கில்) ‘ஆம்பணை விளைந்த தேக்கட்டேறல்' (அகம், 368 : 14) (பணை-மூங்கில்) ‘அமை விளை தேறல் மாந்திய கானவன்’ (சிலம்பு, 27 : 217) பாரியின் பறம்பு மலையில் இருந்தவர்களும் மூங்கிற்