114
மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம்-4
அளவாக இருந்ததையும் வழியில் இருந்த சுங்கச் சாவடிகளில் அரச ஊழியர் சுங்கம் வாங்கினதையும் அந்தப் புலவரே கூறுகிறார்.
‘தடவுநிலைப் பலவின் முழுமுதல் கொண்ட சிறுசுளைப் பெரும்பழம் கடுப்ப மிரியல் புணர்ப்பொறை தாங்கிய வடுவாழ் நோன்புறத்து அணர்ச்செவி கழுதைச் சாத்தோடு வழங்கும் உல்குடைப் பெருவழி’ (பெருண்பாண். 77-80)
(பலவின் முழு முதல் - பலா மரத்தின் அடிப்புறம். பலா மரத்தின் அடிப்பக்கத்தில் பலாப் பழங்கள் காய்ப்பது இயல்பு. கடுப்ப - போல. மிரியல் - மிளகு, கறி. நோன்புறம் வலிமையுள்ள முதுகு. சாத்து - வணிகக் கூட்டம். உல்கு - சுங்கம், சுங்கச் சாவடி)
காவிரிப்பூம்பட்டினத் துறைமுகத்தில் மிளகு மூட்டைகள் தரைவழியாக வந்தன என்று கூறப்படுவதனால், இந்த மிளகு மூட்டைகள் மற்றப் பொருள்களோடு வெளி நாடுகளுக்குக் கப்பலில் ஏற்றியனுப்பப்பட்டன என்று கருத வேண்டியிருக்கின்றது.
அரபு தேசத்து அராபியர் பழங்காலத்தில் தமிழகத்தின் மேற்குக் கடற்கரைத் துறைமுகப் பட்டினங்களுக்கு வந்து மிளகை வாங்கிக் கொண்டு போய் எகிப்து உரோமாபுரி முதலான மத்திய தரைக்கடல் பிரதேசங்களில் விற்றனர். கி.மு. முதல் நூற்றாண்டில், யவனர் (கிரேக்கரும் உரோமரும்), அராபியரிடமிருந்து மிளகு வாணிகத்தைக் கைப்பற்றினார்கள். அவர்கள் நேரடியாகத் தாங்களே கப்பல்களைச் சேர நாட்டுத் துறைமுகப்பட்டினங்களுக்குக் கொண்டு வந்து முக்கியமாக மிளகையும் அதனுடன் மற்ற பொருள்களையும் ஏற்றிக் கொண்டு போனார்கள். அவர்கள் முக்கியமாக முசிறித் துறைமுகப்பட்டினத்துக்கு வந்தனர். அவர்கள் முசிறியை முசிறிம் (Muziris) என்று கூறினார்கள். கி.மு. முதல் நூற்றாண்டில் தொடங்கின யவனரின் கப்பல் வாணிகம் கி.பி. மூன்றாம் நூற்றாண்டு வரையில் நடந்தது. யவனர்கள் கிரேக்க மொழியில் அக்காலத்தில் எழுதி வைத்த ‘செங்கடல் வாணிபம்’ (Periplus of Eritherian Sea) என்னும் நூலிலும் பிளைனி என்பார் எழுதிய நூலிலும் யவன - தமிழக் கடல் வாணிபச் செய்திகள் கூறப்படுகின்றன. யவனர்கள் தமிழகத்துக்கு வந்து சேரநாட்டு மிளகையும் கொங்கு நாட்டு நீலக் கல்லையும் பாண்டிநாட்டு முத்தையும் வாங்கிக் கொண்டு போனார்கள்.