பண்டைத் தமிழகம் - வணிகம், நகரங்கள் மற்றும் பண்பாடு
121
அவர்கள் 'உவர்விளை உப்பின் உழாஅ உழவர்' (நற். 331: 1) என்று கூறப்பட்டார்கள்.
உப்பளங்களில் உப்பு விளைந்த பிறகு உப்பைக் குவியல் குவியலாகக் குவிந்து வைத்தார்கள். பிறகு, உப்பை வாங்குவதற்கு வருகிற உப்பு வாணிகரை எதிர்பார்த்திருந்தார்கள்.
'உவர்விளை உப்பின் உழாஅ உழவர்
ஓகை உமணர் வருபதம் நோக்கி
கானல் இட்ட காவற் குப்பை'
(நற்.331 : 1-3)
(உவர் - உவர்நிலம், உப்பளம். உமணர் - உப்பு வாணிகர். கானல் கடற்கரை. குப்பை - குவியல்)
உமணர் (உப்பு வாணிகர்) மாட்டு வண்டிகளில் நெல்லை ஏற்றிக் கொண்டு போனார்கள். அக்காலத்தில் பெரிதும் பண்டமாற்று வாணிகம் நடந்தது. ஆகையால் காசு கொடுத்து வாங்காமல் பண்டங்களை மாற்றினார்கள். நெல்லுக்கு மாற்றிய உப்பை வண்டிகளில் ஏற்றிக் கொண்டு போனார்கள். அவர்கள் மனைவி மக்களொடு வந்து உப்பை வாங்கி கொண்டு குடும்பத்தோடு ஊர் ஊராக வண்டியை ஓட்டிக் கொண்டு போய் உப்பை விற்றார்கள்.
'தந்நாடு விளைந்த வெண்ணெல் தந்து
பிற நாட்டு உப்பின் கொள்ளை சாற்றி
நெடுநெறி ஒழுகை நிலவுமணல் நீந்தி
அவண் உறை முனிந்த ஒக்கலோடு புலம்பெயர்ந்து
உமணர் போகலும்'
(அகம், 183:1-5)
(தம்நாடு - உமணருடைய நாடு. பிறநாடு - (இங்கு) நெய்தல் நிலம். கொள்ளை சாற்றி - விலை கூறி. ஒழுகை - வண்டி. அவண் - அங்கே. ஒக்கல் - சுற்றம்.)
உமணர் உப்பு வண்டிகளை ஒட்டிக் கொண்டு கூட்டங் கூட்டமாகச் சென்றார்கள்.
'உவர்விளை உப்பின் கொள்ளை சாற்றி
அதர்படு பூழிய சேண்புலம் படரும் ததர்கோல் உமணர் போகும் நெடுநெறிக் கணநிரை வாழ்க்கை’
(அகம், 390 : 1-4)