பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 4.pdf/130

இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

பண்டைத் தமிழகம் - வணிகம், நகரங்கள் மற்றும் பண்பாடு

129


பரணி ஆறு கடலில் கலந்த இடத்தில் கொற்கைப் பட்டினம் இருந்தது. கொற்கைக் கடலில் முத்துச் சிப்பிகளும் சங்குகளும் அதிகமாகக் கிடைத்தபடியாலும் துறைமுகப் பட்டினமாக இருந்தபடியாலும் கொற்கைப் பட்டினத்தில் பாண்டியனுடைய இளவரசர்கள் தங்கி வாழ்ந்தார்கள்.

முத்துச் சிப்பிகளையும் சங்குகளையும் மூழ்கி எடுக்கும் போது அச்செய்திச் சங்கு முழங்கித் தெரிவிக்கப்பட்டது.

'சீருடைய விழுச்சிறப்பின்

விளைந்து முதிர்ந்த விழுமுத்தின்

இலங்கு வளை யிருஞ்சேரிக்

கட்கொண்டிக் குடிப்பாக்கத்து

நற்கொற்கையோர் நசைப் பொருந'

என்று தலையாலங்கானத்துச் செருவென்ற பாண்டிய நெடுஞ்செழியன் கூறப்படுகின்றான் (மதுரைக். 134 -138)

கொற்கைக் கடலில் மீன் பிடிக்கும் போது மீனுடன் முத்துச் சிப்பியும் கிடைத்தனவாம். மீன் பிடிப்போர் அச்சிப்பிகளைக் கொண்டு போய்க் கள்ளுக் கடையில் கொடுத்து அதற்கு மாறாகக் கள்ளை வாங்கியுண்டனர்.

‘பன்மீன் கொள்பவர் முகந்த சிப்பி

நாரரி நறவின் மகிழ்நொடைக் கூட்டும்

பேரிசைக் கொற்கை'

(அகம், 296:8-10)

பழயர் மகளிர் கொற்கைக் கடலில் கடல் தெய்வத்தை வணங்கிய போது முத்தையும் வலம்புரிச் சங்கையும் கடலில் இட்டு வணங்கினராம்.

பாண்டியன்

புகழ்மலி சிறப்பின் கொற்கை முன்றுறை

அவிர்கதிர் முத்தமொடு வலம்புரி சொரிந்து தழையணிப் பொலிந்த கோடேந்தல்குல்

பழையர் மகளிர் பனித்துறை பரவ’

(அகம். 201: 4-7)

ஒருவன் குதிரை மேல் அமர்ந்து கடற்கரையோரமாகச் சென்ற போது குதிரையின் குளம்புகளில் முத்துக்கள் தட்டுப் பட்டனவாம்.