பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 4.pdf/133

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

132

மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம்-4



அக்காலத்தில் குறிஞ்சி (மலை)களில் வாழ்ந்த குறவர்கள் யானைகளை வேட்டையாடிக் கொன்று அவற்றின் கோடுகளைச் (தந்தங்களை) சேர்த்து வைத்தார்கள். அவர்களுக்குச் சோற்றுப் பஞ்சம் வந்த காலத்தில் தந்தங்களை விற்று உணவு வாங்கி உண்டனர். யானைகளை வேட்டையாடிக் கொன்றார்கள்.

புலியொடு போர்செய்து புண்பட்டு இளைத்துப்போன யானையைக் கானவர் அம்புஎய்து கொன்று அதன் கோடுகளைக் கைக் கொண்டார்கள்.

'புலியொடு பொறாத புண்கூர் யானை
நற்கோடு நயந்த அன்பில் கானவர்
விற்சுழிப்பட்ட நாமப் பூசல்'
(நற்றிணை, 65:5-7)

கொல்லிமலையில் இருந்த குறவர் உணவு கிடைக்காமல் பசித்திருந்தபோது தங்களிடமிருந்த யானைக் கோடுகளை விற்று உணவு அருந்தினார்கள்.

'காந்தளஞ் சிலம்பில் சிறுகுடி பசித்தெனக்
கடுங்கண் வேழத்துக் கோடு நொடுத்துண்ணும்
வவ்வில் ஒரி கொல்லிக் குடவரை'
(குறுந், 100 : 3-5)

வேங்கடமலையில் வாழ்ந்தவர் ஒன்று சேர்ந்து யானையை வேட்டையாடிக் கொன்று அதன் கோடுகளைக் கொண்டு போய் மதுக்கடையில் கொடுத்து மது அருந்தினார்கள். மதுவை நெல்லுக்கு மாற்றுவது வழக்கம். இவர்கள் நெல்லுக்குப் பதிலாக யானைக் கோட்டைக் கொடுத்தனர்.

'வரிமாண் நோன் ஞான் வன்சிலைக் கொளீஇ அருநிறத் தழுத்திய அம்பினர் பலருடன்
அண்ணல் யானை வெண்கோடு கொண்டு
நறவு நொடை நெல்லின் நாண்மகிழ் அயரும்
... ... .. ... ... .. ... ... .. ... ... .. ... ... ..
விழவுடை விழுச்சீர் வேங்கடம்’
(அகம், 61 : 7 -13)

மலைவாழ் குறவர்கள் அந்தந்த நாட்டு அரசருக்குப் பண்டங்களைக் காணிக்கை செலுத்தும்போது யானைத் தந்தங்களையும் கையுறை யாகக் கொடுத்தார்கள். சேரன் செங்குட்டுவன், பெரியாறு, மலையிலிருந்து விழுகிற இடத்தில் மலையடிவாரத்தில் வழக்கமாகச் சென்று தங்கி வேனிற் காலத்தைக் கழிப்பது வழக்கம். அவன் மலையடி வாரத்துக்கு வரும்போது மலையில் வாழுங் குறவர்கள் அவனுக்குக் காணிக்கைச் செலுத்தினார்கள். மலைகளில் கிடைக்கும் பொருள்க-