பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 4.pdf/145

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

144

மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம்-4



2. வேந்தனும் வருணனும்

வேந்தன் மேய தீம்புனல் உலகமும்
வருணன் மேய பெருமணல் உலகமும்

என்று தொல்காப்பியம் (பொருள். அகத்திணையியல், நூற்பா. 5) கூறுகிறது. இதில் கூறப்பட்ட வேந்தன், வருணன் என்னும் தெய்வங்கள் எவை? அத்தெய்வங்களின் வரலாறு என்ன? சிலர் கருதுவது போல அத்தெய்வங்கள் ஆரியத் தெய்வங்கள்தானா? என்பதை ஆராய்வோம்.

தீம்புனல் உலகமாகிய மருத நிலத்தின் தெய்வம் வேந்தன் என்றும், பெருமணல் உலகமாகிய நெய்தல் நிலத்தின் தெய்வம் வருணன் என்றும் தொல்காப்பியம் கூறுகிறது. எனவே தொல்காப்பியர் காலத்தில் இந்த இரண்டு தெய்வங்களும் தமிழர்களால் வணங்கப்பட்டனர் என்பது தெரிகின்றது. பிற்காலத்திலே இந்த இரண்டு தெய்வங்களும் மறக்கப்பட்டு மறைந்து போயின.

வேந்தன் - இந்திரன்

தொல்காப்பியத்துக்கு உரை எழுதிய உரையாசிரியர்கள், மிகமிகப் பிற்காலத்தில் இருந்தவர்கள். இவ்வுரையாசிரியர்களில் இளம்பூரணர் முற்பட்டவர். நச்சினார்க்கினியார் முதலிய ஏனையோர் பின்னும் பிற்காலத்தவர். பிற்காலத்து உரையாசிரியர்களாகிய இவர்கள் வேந்தன் என்பதற்கு இந்திரன் என்று பொருள் எழுதி யிருக்கிறார்கள். எனவே, இவர்கள் தொல்காப்பிய வேந்தனை, இந்திரன் என்று கூறுகின்றனர். அதாவது திராவிடருடைய வேந்தன் என்னும் தெய்வம், ஆரியருடைய இந்திரன் என்று கூறப்படுகிறான். திராவிட ஆரிய கலாசாரக் கலப்பு ஏற்பட்ட பிற்காலத்தில் ஆரிய இந்திரன், திராவிட வேந்தன் என்னும் தெய்வத்துடன் இணைக்கப்பட்டான். இது, தொல்காப்பியர் காலத்துக்கு மிகமிகப் பிற்காலத்தில் ஏற்பட்ட நிகழ்ச்சி. ஆகையினால்தான், மிக மிகப் பிற்காலத்தவரான உரையாசிரியர்கள் வேந்தன் என்பதற்கு இந்திரன் என்று பொருள் கூறினார்கள்.

திராவிட ஆரிய கலாசாரக் கலப்பு கி.மு. மூன்றாம் நூற்றாண்டில் (அசோக சக்கரவர்த்தி காலத்தில்) தொடங்கிற்று என்று கருதலாம். ஆரிய கலாசாரக் கலப்பு ஏற்படாத மிகப் பழைய காலத்தில், திராவிடராகிய தமிழா வணங்கிய மருதநிலக் கடவுளாகிய வேந்தன் என்னும் தெய்வம், பல நூற்றாண்டுகளுக்குப் பிறகு ஏற்பட்ட திராவிட