பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 4.pdf/146

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பண்டைத் தமிழகம் - வணிகம், நகரங்கள் மற்றும் பண்பாடு

145


- ஆரியக் கலாசாரக் கலப்பின் காரணமாக ஆரியரின் இந்திரனோடு இணைக்கப்பட்டு, இந்திரன் என்னும் பெயரினால் வழங்கப்பட்டது. பிறகு, பையப் பையப் பழைய வேந்தன் என்னுந் தெய்வம் மறக்கப்பட்டு அந்த இடத்தில் புதிய இந்திரன் வழிபடப் பட்டான். சங்க காலத்துக்குப் பிறகு, சில நூற்றாண்டுகளுக்குப் பின்னர், இந்திரனும் மறக்கப்பட்டு மறைந்து போனான்.

வேந்தன் என்னுஞ் சொல், வேந்து, வேந்தமை என்னும் சொல்லடியாகத் தோன்றி அரசர்களின் தெய்வம் என்னும் பொருளில் வழிபடப்பட்டது என்று கருதலாம். ஆளுகை சம்பந்தப்பட்ட இத்தெய்வம் அரசர்களின் தெய்வமாக இருந்தது போலும். தீம்புனல் உலகமாகிய மருத நிலத்திலே அதாவது ஆற்றங்கரைகளிலும் ஏரிக்கரைகளிலும் மக்களுடைய நாகரிகம் தோன்றி வளர்ந்தது என்று சரித்திரங் கூறுகிறது. ஏனென்றால், ஆற்றங்கரையும் ஏரிக்கரையுமாகிய நீர் வளமுள்ள மருதநிலத்திலேதான் உணவுப் பொருள்கள் பயிராயின. உணவு முட்டுப்பாடின்றிக் கிடைத்த இவ்விடங்களிலே மக்களின் நாகரிகம் தோன்றி வளர்ந்ததைச் சரித்திரக்காரர்கள் எல்லோருங் கூறுகிறார்கள். இது உலகத்திலே எல்லா நாடுகளிலும் நிகழ்ந்த நிகழ்ச்சி. இந்த முறைப்படித்தான் தமிழ் நாட்டிலும் மருத நிலங்களில் உணவுப் பொருள்கள் அதிகமாக விளைந்தன.

உணவு உற்பத்தி இருந்தாலும் அமைதியும் ஒழுங்கும் மக்களிடத்தில் நிலைபெற்றால்தான் மனித சமூகம் நாகரிகமாக வாழ முடியும். மக்கள் சமூகத்திலே அமைதியையும் ஒழுங்கையும் உண்டாக்கினவர், ஆதி காலத்தில் பெரும்பாலும் அரசர்தான். ஆகவே தமிழ் நாட்டு அரசர்கள் வேந்தன்மையை (ஆட்சி முறையை) நடத்தினார்கள். வேந்தன்மைக்குத் தெய்வம் வேந்தன். இந்த வேந்தனாகிய தெய்வத்தைதான் பழந்தமிழகத்தின் மருத நிலமக்கள் தெய்வமாக வணங்கினார்கள். அதனால் தான் தொல்காப்பியர் மக்களிடத்தில் இருந்த இந்தத் தெய்வ வழிபாட்டைத் தம்முடைய தொல்காப்பியத்தில் கூறினார்.

தொல்காப்பியர் காலத்துக்கு மிகப் பிற்பட்ட காலத்தில், பல நூற்றாண்டுக்குப் பிறகு, திராவிட - ஆரியக் கலாசாரக் கலப்பு ணைப்பு) ஏற்பட்டது. இந்தக் கலாசாரக் கலப்பு முக்கியமாகத் தெய்வ வழிபாட்டிலே ஏற்பட்டது. திராவிட தெய்வ வழிபாட்டை ஆரியரும்