பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 4.pdf/149

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

148

மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம்-4


ஏற்றுக்கொண்டு அத்தெய்வத்தைப் பற்றி இருக்கு வேதத்தில் பாடி வைத்தார்கள்.

அக்காலத்தில் வட இந்தியாவில் வாழ்ந்துவந்த திராவிட இனத்தாருக்கு அசுரர் என்று பெயர் இருந்தது. அசுரர்களில் ஒரு பிரிவினர் நாகர் என்பவர். நாகர் ஆதிகாலத்தில் தமிழ் நாட்டிலும் இருந்ததைச் சங்க நூல்களிலிருந்து அறிகிறோம். அசுரரும் அவரில் ஒரு பிரிவினரான நாகரும் வருணன் என்னும் தெய்வத்தை வழிபட்டனர். வருணன் முக்கியமாகக் கடல் தெய்வமாகக் கருதப்பட்டான். திராவிடர் அக்காலத்தில் பெரிய கடல் வாணிகராக இருந்தனர். அவர்கள் வருணனை முக்கியமாக வணங்கினார்கள். வேதகாலத்து ஆரியர் வட இந்தியாவில் நுழைந்தபோது அவர்களுக்கும் அசுரர்களுக்கும் ஏற்பட்ட கலாசாரத் தொடர்பினால், ஆரியர் திராவிட வருணனைத் தம் தெய்வமாக ஏற்றுக் கொண்டனர். ஆனால், வருணன் வணக்கம் ஆதியில் ஆரியர்களுக்குரியதன்று. இவை எல்லாம் ஆராய்ச்சி யாளர்கள் கூறுகிற செய்திகள்.

எனவே, திராவிடராகிய தமிழர் ஆதிகாலத்தில் வருணனைக் கடல் தெய்வமாக வழிபட்டது வியப்பன்று. தமிழர் வணங்கிய திராவிட இனத்துக் கடவுளாகிய வருணனைத்தான் தொல்காப்பியர் தமது இலக்கணத்தில் கூறினார். மேலும், கடற்கரையில் வாழ்ந்த நெய்தல் நிலத்துத் தமிழர், வருணனை வணங்கியதாகக் கூறுகிறார். அந்த வருண வணக்கமும் திராவிட முறைப்படி செய்யப்பட்டது.

சினைச்சுறவின் கோடு நட்டு
மனைச்சேர்த்திய வல்லணங்கினான்.

என்று பட்டினப்பாலையில் (அடி. 86-87) கடல் தெய்வமாகிய வருணன் வணக்கம் கூறப்பட்டிருக்கிறது. நச்சினார்க்கினியரும் இதை நன்கு விளக்கிக் கூறுகிறார்: ‘இனி நெய்தல் நிலத்தில் நுளையர்க்கு வலைவளந்தப்பின் அம்மகளிர் கிளையுடன் குழீஇக் சுறவுக்கோட்டுப் பரவுக்கடன் கொடுத்தலின் ஆண்டு வருணன் வெளிப்படும் என்றார்’ (தொல், பொருள் - அகத்திணை 5ஆம் சூத்திர உரை)

ஒருவகைச் சுறா மீனின் வாய்ப்புறத்தில் நீண்ட கோடு (கொம்பு) உண்டு. அது நான்கு அடி நீளம் வரையில் நீண்டு வளர்வதும் உண்டு. தட்டையாக நீண்டு வளர்ந்துள்ள சுறாமீன் கோட்டில் இருபுறங்களிலும்