பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 4.pdf/150

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பண்டைத் தமிழகம் - வணிகம், நகரங்கள் மற்றும் பண்பாடு

149


முள்ளுகள் உண்டு. இந்தச் சுறாமீன் கோட்டை நட்டுத் தமிழ்நாட்டு நெய்தல் நிலமக்கள் வருணனை வணங்கினார்கள். ஆரியர் தங்கள் வருணனை இவ்விதமாக வணங்கவில்லை. வருணனை முதலில் போற்றிப் பாடிய ஆரியர் பிறகு அத்தெய்வத்தை இகழ்ந்து பாடியதாகவும் தெரிகிறது.

தமிழ்நாட்டுக் கப்பல் வாணிகரும் வருணனை வணங்கினார்கள். தமிழ்நாட்டு வாணிகன் ஒருவன் இலங்கைத் தீவின் தென்கோடியில் இருந்த தேவநுவர என்னும் ஊரில் (காலி என்னும் ஊரில்) கடல் தெய்வமாகிய வருணனுக்கு ஒரு கோவில் கட்டினான் என்று இலங்கை நூல்கள் கூறுகின்றன.

எனவே, தொல்காப்பியம் கூறுகிற தமிழரின் வருணன், ஆரியர் வணங்கிய வருணனைக் கடனாகப் பெற்ற தெய்வம் அன்று. ஆதிகாலத்தில் இருந்து திராவிட இனத்தார் வழிபட்டு வந்த வருணனைத் தமிழர் வணங்கினார்கள். அத்தெய்வத்தைத்தான் தொல்காப்பியர் கூறினார். இவற்றையெல்லாம் ஆராயாமல், ஆரிய வேதத்தில் வருணன் கூறப்படுகிறபடியால், அந்த வருணனைத் தமிழர் ஏற்றுக்கொண்டு வணங்கினார்கள் என்று கூறுவதும், வருணனைக் கூறுகிற தொல்காப்பியம், ஆரிய திராவிடர் கலப்பு ஏற்பட்ட பிற்காலத்தில் எழுதப்பட்ட நூல் என்று கூறுவதும் ஆழ்ந்து பாராமல் மேற்போக்காகக் கூறுகிற போலி யாராய்ச்சியாகும். எனவே, இந்திரன் வருணன் என்னும் தெய்வங்களைக் கூறுகிற தொல்காப்பியம் பிற்காலத்து நூல் என்று சிலர் கூறுவது ஏற்கத்தக்கதன்று.

வருணன் வணக்கம் தமிழ்நாட்டில் மறைந்து போனதற்குக் காரணம் பௌத்த மதம். பௌத்த மதத்தின் கடற்காவல் தெய்வமாக மணிமேகலா தெய்வம் கூறப்படுகிறது. சிலப்பதிகாரம், மணிமேகலைக் காவியம் முதலிய தமிழ் நூல்களும் புத்த ஜாதகம் முதலிய பௌத்தமத நூல்களும் மணிமேகலா தெய்வத்தைக் கூறுகின்றன. பௌத்த மதம் தமிழ் நாட்டுக்கு வந்தபோது, தமிழரின் கடல் தெய்வமாகிய வருணன் இடத்தை மணிமேகலா தெய்வம் பிடித்துக் கொண்டது ஆகவே, வருணன் பையப்பைய நாளடைவில் மறக்கப்பட்டு மறைந்து போனான். பின்னர் மணிமேகலா தெய்வமும் மறக்கப்பட்டு மறைந்து போயிற்று.