பண்டைத் தமிழகம் - வணிகம், நகரங்கள் மற்றும் பண்பாடு
151
தாமே சந்தேகப்படுகிற ஒரு சான்றை இவர் ஏன் கூறவேண்டும்? அர்த்த சாத்திரத்தின் காலம் விவாதத்துக்குரியது, ஆகவே அந்தச் சான்றைக் காட்டவேண்டுவதில்லை என்று கூறுகிறவர், அர்த்த சாஸ்திரத்திலிருந்து தொல்காப்பியம் 32 உத்திகளை எடுத்துக் கொண்டது என்று ஏன் கூறவேண்டும்? இது இவருடைய தாழ்வுமனப் பான்மையைக் காட்டுகிற தன்றோ? சம்ஸ்கிருதத்திலிருந்துதான் தமிழில் நூல் எழுத விஷயம் எடுக்கவேண்டும் என்னும் சமஸ்கிருத மூடபக்தி இவரை இப்படியெல்லாம் எழுதச் செய்தது போலும்.
இவ்வாறு சிலர் கூறுவதுபோல, கௌடல்யரின் அர்த்த சாஸ்திரத்துக்கும் தொல்காப்பியத்துக்கும் ஏதேனும் சம்பந்தம் உண்டா என்பதை ஆராய்வோம். அர்த்த சாஸ்திரத்தை எழுதிய கௌடல்யர், அசோக சக்கரவர்த்தியின் பாட்டானாகிய சந்திரகுப்த மௌரியன் காலத்தில் இருந்தவர் என்றும், அவ்வரசனுக்கு அமைச்சராக இருந்தவர் என்றுங் கூறப்படுகிறார். அவர் எழுதிய அர்த்த சாத்திரத்தில், அவருக்குப் பின்னால் வந்த சில ஆசிரியர்கள் பல விஷயங்களை அதில் சேர்த்து எழுதிவைத்தனர் என்றுங் கூறப்படுகிறது. அதாவது, கௌடல்யர் தொடங்கி எழுதிவைத்த அர்த்த சாத்திரத்தில், அவர் எழுதாத பல விஷயங்களை அவருக்குப் பிற்காலத்தில் இருந்தவர்கள் அவ்வக்காலங்களில் புதிய புதிய கருத்துக்களையும் எழுதி அதனுடன் சேர்த்துவிட்டனர் என்று கூறப்படுகிறது. எனவே, கௌடல்யரின் அர்த்த சாத்திரத்தில் இடைச் செருகல்கள் ஏற்பட்டு, கௌடல்யர் எழுதிய கருத்து மட்டும் இல்லாமல் வேறு பலருடைய கருத்துக்களும் பிற்காலங்களில் நுழைக்கப்பட்டன என்று தெரிகிறது.
அர்த்த சாஸ்திரத்தை எழுதியவர் விஷ்ணு குப்தர் என்னும் பிராமணர் என்றுங் கூறப்படுகிறது. இவர் தென்னாட்டுப் பிராமணர் என்றுங் கூறப்படுகிறார். தென்னாட்டுப் பிராமணராகிய விஷ்ணுகுப்தர் தொல்காப்பியத்தை அறிந்தவராகவும் இருக்கலாம். அவர், அர்த்த சாஸ்திரத்தில் சில புதிய விஷயங்களை இடைச் செருகலாகப் புகுத்திச் சேர்த்ததில் தொல்காப்பியரின் 32 உத்திகளையும் அர்த்த சாத்திரத்தில் புகுத்தியிருக்கலாம். அல்லது, தொல்காப்பியத்தை அறிந்த வேறுயாரோ அந்த உத்திகளை அர்த்த சாத்திரத்தில் புகுத்தி எழுதியிருக்கலாம். இவ்வாறு இடைச் செருகல்களைக் கொண்டிருக்கிற அர்த்த சாத்திரத்திலிருந்து தொல்காப்பியர் 32 உத்திகளை எடுத்தார் என்று கூறுவதும், ஆகவே, தொல்காப்பியம் அர்த்த சாத்திரத்துக்குப்