154
மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம்-4
கோள்நிலையும் பிறவும் பார்த்துப் பயன் கூறல். ஆதலான் மூவகைக் காலமும் ‘நெறியின் ஆற்றிய அறிவன்’ என்றார். உதாரணம்:
புரிவின்றி யாக்கைபோற் போற்றுவ போற்றிப்
பரிவின்றிப் பட்டாங் கறியத் திரிவின்றி
விண்ணில் வுலகம் விளைவிக்கும் விளைவெல்லாங்
கண்ணி யுரைப்பான் கணி.
இவ்வாறு இளம்பூரண அடிகள் அறிவன் என்பதற்குக் கணிவன் என்று பொருள் கூறுகிறார்.
ஆகவே, நச்சினார்க்கினியர் கருத்துப்படி அறிவன் என்பவன் துறவுபூண்டு தவஞ்செய்து இறப்பு எதிர்வு நிகழ்வு என்னும் முக்கால நிகழ்ச்சிகளையும் அறியும் முழுதுணர்வுடையவன் என்று கொள்ள வேண்டியிருக்கிறது.
இளம்பூரணர் கருத்துப்படி, அறிவன் என்பவன் மழையும் பனியும் வெயிலுமாகிய மூவகைக் காலத்தினையும் வானத்தில் நிகழும் கோள்களின் நிலையினையும் அறிந்து பயன் கூறும் கணிவன் என்று கருதவேண்டியிருக்கிறது. மாறுபட்ட இவ்விரண்டு கருத்துகளில் எது உண்மை என்பதை ஆராய்வோம்.
வேறு சில தொல்காப்பியச் சூத்திரங்களும் அறிவரைக் கூறுகின்றன. அவை:
சொல்லிய கிளவி அறிவர்க்கு முரிய (தொல். பொருள். கற்பியல் 13)
இடித்துவரை நிறுத்தலும் அவரது ஆகும்
கிழவனும் கிழத்தியும் அவர்வரை நிற்றலின் (தொல். பொருள். கற்பியல் 14)
(இதில், அவர் என்றது அறிவரை யுணர்த்திற்று)
தோழி தாயே பார்ப்பான் பாங்கன்
பாணன் பாட்டி யிளையர் விருந்தினர்
கூத்தர் விறலியர் அறிவர் விருந்தினர்
யாத்த சிறப்பின் வாயில்க ளென்ப. (தொல். பொருள். கற்பியல். 52)