பண்டைத் தமிழகம் - வணிகம், நகரங்கள் மற்றும் பண்பாடு
215
வெள்ளத்தில் முழுகிப் போனதை மணிபல்லவதீவில் கேள்விப்பட்ட மணிமேகலை, காவிரிப்பூம்பட்டினத்துக்குப் போகாமல் நேரே வஞ்சிமா நகரத்துக்கு ..... சேரன் செங்குட்டுவன் எடுத்திருந்த பத்தினிக் கோட்டஞ் சென்று வணங்கவேண்டும் என்பது அவளுக்குத் தோன்றிய ஆர்வமாகும். அவள் நேரே பத்தினிக் கோட்டஞ் சென்று கண்ணகியின் படிவத்தை வணங்கினாள் என்று மணிமேகலை காவியங் கூறுகிறது. கண்ணகி யின் படிவத்தை வணங்கின பிறகு, மணிமேகலை நகரத்துக்குள் சென்றாள் என்றும், சென்றவள் தற்செயலாக நகரத்தின் குடவாயி லண்டைத் தன்னுடைய பாட்டனான மாசாத்துவானைக் கண்டனள் என்றும் மணிமேகலை காவியம் கூறுகிறது. இவளுடைய பாட்டனான மாசாத்துவான், கோவலனும் கண்ணகியும் இறந்தபிறகு வாழ்க்கையை வெறுத்துத் துறவுபூண்டு வஞ்சிமாநகரத்தில் இருந்த பௌத்த விகாரையில் தங்கியிருந்தான். இந்த பௌத்தவிகாரை வஞ்சி நகரத்தின் மேற்கு வாயிலருகில் இருந்தது. மணிமேகலை, குணவாயிலில் (கிழக்கு வாயிலில்) நுழைந்து நகரத்துக்குள் சென்று, மேற்கு வாயிலண்டை தன்னுடைய பாட்டனைக் கண்டாள் என்று தெரிகிறது. மணிமேகலை காவியம் 26-வது காதையின் தலைப்புக்கு விளக்கங் கூறுகிற அதன் கொளு, 'மணிமேகலை கண்ணகி கோட்டமடைந்து வஞ்சிமாநகர் புக்க பாட்டு' என்று கூறுகிறது. இதிலிருந்து, கண்ணகி கோட்டம் நகரத்துக்கு வெளியே (கோட்டை மதிலுக்கு வெளியே) இருந்ததென்பது திட்டமாகத் தெரிகிறது.
குணவாயிற் கோட்டத்துக்கு அருகிலே, அமைக்கப்பட்டிருந்த பத்தினிக் கோட்டத்துக்குப் பக்கத்தில் வைதிக மதத்தவரின் வேள்விச் சாலை இருந்தது. பத்தினித் தெய்வம் மன்னர்களுக்கு வரங்கொடுத்த பிறகு, செங்குட்டுவன் மன்னர்களுடன் மாடலமறையவனுடனும் வேள்விச் சாலைக்குச் சென்றனன் என்று சிலப்பதிகாரம் கூறுகிறது.35 செங்குட்டுவன் பத்தினிக் கோட்டத்தைவிட்டு வேள்விச் சாலைக்குப் போன பிறகு, குணவாயிற் கோட்டத்திலிருந்த இளங்கோ அடிகள் பத்தினிக் கோட்டஞ் சென்றார்.36 இவற்றிலிருந்து குணவாயில் கோட்டத்துக்கு அருகிலேயே பத்தினிக் கோட்டமும் வேள்விச் சாலையும் இருந்தன என்பது தெரிகின்றன.
குணவாயில் கோட்டத்துக்கு அருகில், கோட்டை வாயிலுக்கு வெளியே, அரசாங்க மாளிகையொன்று இருந்தது. இது வேள் ஆவிக்கோ மாளிகை என்று பெயர் பெற்று இருந்தது. வேளாவிக்கோ மாளிகை, நீர் சூழ்ந்த பொழிலின் நடுவிலே அமைந்திருந்தது.