பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 4.pdf/219

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

218

மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம்-4



முசிறிப் பட்டினத்தை சங்கப்புலவர் நக்கீரர் 'முன்னுறை முதுநீர் முசிறி' என்று கூறுகிறார்.42 இன்னொரு சங்கப்புலவரான நக்கீரர் 'முழங்கு கடல் முழவின் முசிறி' என்று கூறுகிறார்.43 அராபியரும் கிரேக்க யவனரும் மேற்கக் கரைத் துறைமுகங்களுக்கு வந்து வாணிகஞ் செய்தார்கள். அவர்களின் முக்கியமான குறிக்கோள் முசிறித் துறைமுகமாக இருந்தது. யவன வாணிகர் தங்களுடைய அழகான பெரிய நாவாய்களை எகிப்து நாட்டு அலெக்சாந்திரிய துறைமுகப் பட்டினத்திலிருந்து செங்கடல் வழியாகச் செலுத்திக் கொண்டு, அரபிக் கடலுக்கு வந்து முசிறி, தொண்டி முதலான துறைமுகப் பட்டினங்களுக்குச் சென்று கடல் வாணிகஞ் செய்தார்கள். கி.பி. முதல் நூற்றாண்டின் தொடக்க காலத்தில் ரோமப் பேரரசை ஆட்சியெத் பேர்போன அகுஸ்தஸ் சக்கரவர்த்தி இந்தக் கப்பல் வாணிகத்தை நிலைநிறுவினார். அவர் செங்கடல் பகுதியில் இருந்த அராபியரை அடக்கி, யவனக் கப்பல்கள், செங்கடல் பட்டினங்களிலும் அரபிக் கடல் பட்டினங்களிலும் சென்று வாணிகஞ் செய்ய வழிசெய்தார். அக்காலத்தில், கப்பல்கள் நடுக்கடலில் செல்லாமல் கரையோரமாகவே சென்று வந்தன. அதனால், மாதக் கணக்கில், ஆண்டுக் கணக்கில் காலதாமதம் ஏற்பட்டது. பருவக் காற்றின் துணைகொண்டு செங்கடலிலிருந்து நடுக் கடலில் கப்பல் ஓட்டி, முசிறித் துறைமுகத்துக்கு விரைவில் வந்து போகும் ...... அராபிய வாணிகரும் அறிந்திருந்தார்கள். இவர்கள் அறிந்திருந்ததை கிரேக்க மாலுமியாகிய ஹிப்பலஸ் என்பவன் எப்படியோ அறிந்து கொண்டு, யவனக் கப்பல்களை நடுக்கடல் வழியே செலுத்திக்கொண்டு முசிறித் துறைமுகத்துக்கு வந்தான். அதுமுதல் யவனக் கப்பல்கள் விரைவாக நடுக்கடல் வழியே முசிறித் துறைமுகத்துக்கு வந்து போகத் தொடங்கின. பருவக் காற்றுக்கு ஹிப்பலஸ் என்பவன் பெயரையே யவனர் சூட்டினார்கள். ஹிப்பலஸ் கி.பி. 40-ல் இந்தப் பருவக் காற்றைப் பயன்படுத்தினான் என்பர்.

கி.பி. முதல் நூற்றாண்டிலும் இரண்டாம் நூற்றாண்டிலும் சேரநாட்டுத் துறைமுகங்களோடு யவனர் செய்த கப்பல் வாணிகம் உச்ச நிலையில் இருந்தது. இந்த யவன-தமிழ் வாணிகத்தைச் செம்மையாக வளர்த்த அகுஸ்தஸ் சக்கரவர்த்திக்கு கிரேக்க வாணிகர் முசிறிப் பட்டினத்தில் ஒரு கோயிலைக் கட்டிப் பாராட்டினார்கள்.44 சங்க காலத்தில் காவிரிப்பூம்பட்டினத்திலும் அரிக்கமேடு துறைமுகத்திலும் யவன மாலுமிகள் தங்கியிருந்தது போலவே, முசிறி பட்டினத்திலும் யவன