228
மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம்-4
இயைபுடைய நாடகக்கலையையும் ஆராய்ந்தனர். எனவே, அவர்கள் ஆராய்ந்தது முத்தமிழ்; அதாவது, இயற்றமிழ், இசைத்தமிழ், நாடகத்தமிழ் என்னும் மூன்று தமிழ். இயல் இசை நாடகத்தைச் சங்கப் புலவர்கள் ஆராய்ந்தனர் என்பது ஒருபுறமிருக்க, நாரத முனிவரும் அகத்திய முனிவரும் தமிழிசையை வகுத்த பெரியோர் என்பதைப் பழைய நூல்கள் கூறுகின்றன.
இசைக்கலையை ஆராய்ந்த தமிழர் அதை ஏழாகப் பிரித்து, எழு பெயர்களைச் சூட்டினார்கள். அவர்கள் சூட்டிய ஏழு இசைப்பெயர்கள் இளி, விளரி, தாரம், குரல், துத்தம், கைக்கிளை, உழை என்பன.அப் பழைய பெயர்களை மாற்றி இப்போது ஷட்ஜம், இருஷபம், காந்தாரம், மத்திமம், பஞ்சமம், தைவதம், நிஷாதம் என்று புதுப் பெயர்கள் கூறுகிறார்கள்.
இசைப்பாட்டை வேறும் வாய்ப்பாட்டாகப் பாடினால் போதாது. அதற்குப் பக்கத் துணையாக வேறு இசைக் கருவிகளும் வேண்டும். மத்தளம். யாழ், குழல் மூன்றையும் சங்காலத்தில் இசைக்கருவிகளாகக் கொண்டிருந்தார்கள். யாழ் என்னும் இசைக்கருவி பழைய காலத்திலே தமிழ்நாட்டிலே சிறப்பாக வழங்கிவந்தது. மிகப் பழைய காலத்திலே உலகம் முழுவதும் இசைக்கருவியாக இருந்தது யாழ். யாழ் என்னும் இசைக் கருவி எப்படி கண்டுபிடிக்கப்பட்டது என்பதை இங்குக் கூறுவது பொருத்தமாகும். வில் என்னும் போர்க்கருவியிலிருந்து யாழ் என்னும் இசைக்கருவி கண்டுபிடிக்கப்பட்டது என்று அறிஞர்கள் கூறுகிறார்கள்.
பண்டைக் காலத்திலே-அணுக்குண்டும், வெடிகுண்டும், துப்பாக்கியும், பீரங்கியும் கண்டுபிடிக்கப்படுவதற்கு வெகு காலத்துக்கு முன்னே-மனித இனத்துக்கு வேட்டையாடவும் போர் செய்யவும் முக்கிய ஆயுதமாக இருந்தது வில்லும் அம்பும்தான். வில்லில் நாணைப் பூட்டி அதில் அம்பைத் தொடுத்து நாணைப் பலமாக இழுத்து அம்பை விசையாக எய்தவுடன், நாணின் அதிர்ச்சியினால் ஒருவிதமான ஓசை உண்டாயிற்று. அந்த ஓசை வண்டுகளின் ரீங்காரம்போல இனிய ஓசையாக இருந்தபடியால், அக்காலத்து மனிதர் அந்த ஓசை உண்டான காரணத்தை நுட்பமாக ஆராய்ந்து, அதன் பயனாக வில்யாழ் என்னும் இசைக் கருவியை உண்டாக்கினார்கள். கொடிய போர்க் கருவி, மனிதனின் அறிவினாலும் இசை ஆராய்ச்சியினாலும் நல்லதோர் இசைக்கருவியாக மாறிற்று. இவ்வாறு கண்டு பிடிக்கப்பட்ட வில்யாழ், ஆதிகாலத்தில் உலகம் முழவதும் இசைக்கருவியாக வழங்கி வந்தது.