22
மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம்-4
பெயர்பெற்றன. சங்க காலத்தில் மிக நீண்ட கடற்கரை தமிழகத்துக்கு இருந்தது. அக்காலத்தில், மேற்குக் கடற்கரையை யடுத்திருந்த சேர நாடும் (இப்போதைய மலையாள நாடு) துளு நாடும் (இப்போதைய தென் கன்னட வடகன்னட மாவட்டங்கள்) தமிழ்நாடாக இருந்தபடியால், பழந்தமிழகத்துக்கு மிக நீண்ட கடற்கரை இருந்தது. கடற்கரையான நெய்தல் நிலத்தில் வசித்தவர் வாழ்க்கை துன்பகரமான வாழ்க்கை. அவர்கள் நாள்தோறும் கடலில் வெகுதூரம் சென்று மீன் பிடித்து வந்து வாழ்க்கையை நடத்தினார்கள்.
இந்த நால்வகையான இயற்கை நிலம் அல்லாத வறண்ட பிரதேசம் பாலை நிலம் என்று பெயர் பெற்றது. இங்கு இயற்கையாக மக்கள் வாழவில்லை. யாரேனும் இங்கு வசித்தார்கள் என்றால் அவர்களுடை வாழ்க்கை மிருக வாழ்க்கை போல இருந்தது. இவ்வாறு இயற்கையாக அமைந்த வெவ்வேறு சூழ்நிலைகளில் வசித்த அக்காலத்துத் தமிழ் மக்களுடைய வாழ்க்கை வெவ்வேறு வகையாக இருந்தன. அவர்களுடைய தொழிலும் உணவும் உடையும் பண்பாடும் வெவ்வேறு விதமாக இருந்தன. அவற்றைச் சுருக்கமாகக் கூறுவோம்.
குறிஞ்சி நில மக்கள் வாழ்க்கை
மலைகளும் குன்றுகளும் அவற்றைச் சார்ந்த இடங்களும் குறிஞ்சி நிலம் என்று கூறினோம். இங்கு இருந்த ஊர்களுக்குக் குறிஞ்சி என்றும் சிறுகுடி என்றும் பெயர். இங்கு வாழ்ந்த மக்கள் குறவர் என்றும் குன்றவர் என்றும் இறவுளர் என்றும் அழைக்கப் பட்டார்கள். இறவுளர் என்பவர் இக்காலத்து இருளர் என்று கூறப்படுகின்றனர். இங்குச் சுனை நீர் உண்டு. மலையருவிகளும் உண்டு. பொதுவாக அருவிகள் வேனில் காலத்தில் வறண்டுவிடும். எக்காலமும் ஓடிக் கொண்டிருக்கிற அருவிகள் மிகச் சிலவே. மலைப் பாறைகளுக்கிடையே செடி கொடி மரங்கள் உண்டு. குறிஞ்சிச் செடிகளும் காந்தள் செடிகளும் குறிப்பிடத்தக்கவை. மூங்கிற் புதர்கள் உண்டு. வேங்கை, திமிசு, தேக்கு, சந்தனம், அகில், கடம்பு, கருங்காலி முதலான மரங்கள் வளர்ந்தன. பறவைகளில் மயிலும் கிளியும் குறிப்பிடத்தக்கவை. புலி, யானை, சிறுத்தைப் புலி, கரடி, காட்டுப் பன்றி, குரங்கு முதலான மிருகங்கள் இருந்தன.
மலைகளிலும் மலைச்சாரல்களிலும் ஐவன நெல்லையும், தினை என்னும் அரிசியையும் பயிர் செய்தார்கள். மரம் செடி கொடிகளை வெட்டி அப்புறப்படுத்தி வேர்களைக் கிளறிக் கொத்தி நிலத்தைப் பண்-