பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 4.pdf/230

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பண்டைத் தமிழகம் - வணிகம், நகரங்கள் மற்றும் பண்பாடு

229



இந்த யாழின் ஏழு இசைகளையும் அமைத்து வாசிக்கத் தமிழன் கற்றுக் கொண்டான். சங்க காலத்திலே பாணர் என்போர் யாழ் வாசிப்பதிலும் இசை பாடுவதிலும் புகழ் பெற்றிருந்தார்கள்.

காலஞ் செல்லச்செல்ல யாழிற்குப் பிறகு வீணை என்னும் இசைக்கருவி உண்டாக்கப்பட்டது. வீணை உண்டான பிறகு யாழ் மறைந்துவிட்டது. ஆனால், தமிழ்நாட்டில் மட்டும் யாழ் நெடுங்காலம் வழங்கிவந்தது. பிறகு பையப்பைய, கி.பி. 10ஆம் நூற்றாண்டிற்குப் பின்னர், யாழ் என்னும் இசைக்கருவி மறைந்துபோய் வீணை என்னும் கருவி வழங்கப்பட்டது. யாழ் மறைந்து இப்போது ஏறக்குறைய 1000 ஆண்டுகள் சென்றுவிட்டபடியால்,அக்கருவியைப் பற்றி ஒன்றும் அறியமுடியவில்லை. அதைப் பற்றிப் பதினைந்து ஆண்டு ஆராய்ச்சி செய்து, முத்தமிழ்ப் பேராசிரியர் உயர்திரு விபுலாநந்த அடிகள், 1947ஆம் ஆண்டில் ‘யாழ் நூல்' என்னும் ஓர் அரிய நூலை எழுதியிருக்கிறார்கள். யாழை மறைத்துவிட்ட வீணையும் இப்போது மறைந்து கொண்டிருக்கிறது.

சென்ற 19ஆம் நூற்றாண்டிலே தஞ்சாவூர் அரண்மனையில் இசைவாணராக இருந்த வித்துவான் வடிவேலுப் பிள்ளை அவர்கள், பிடில் என்னும் ஐரோப்பிய இசைக்கருவியை ஆராய்ந்து அதனை நமதுநாட்டு இசைப்பாட்டிற்கு ஏற்ற இசைக்கருவியாக அமைத்துக் கொடுத்தார். (வடிவேலுப் பிள்ளை பிடில் வாசித்ததைக் கேட்டு மகிழ்ந்த திருவாங்கூர் அரசரான சுவாதித் திருநாள் மகாராஜா அவர்கள், தந்தத் தினால் செய்த பிடில் கருவியொன்றை 1834ஆம் ஆண்டில் பிள்ளை அவர்களுக்குப் பரிசாக வழங்கினார்கள்) அதுமுதல் பிடில் என்னும் இசைக் கருவி வாய்ப்பாட்டிற்குத் தகுந்த துணைக்கருவியாக வழங்கிவருகிறது.

வாய்ப்பாட்டிற்கு மற்றொரு துணைக்கருவியாக இருந்தது புல்லாங்குழல் அல்லது வேணு என்பது. புல் என்றாலும், வேணு என்றால் மூங்கில் என்று அர்த்தம். ஆதிகாலத்தில் மூங்கிற் குழையினால் செய்யப்பட்ட கருவியாதலால், இதற்குப் புல்லாங்குழல் என்று பெயர் ஏற்பட்டது. புல்லாங்குழல் எப்படி இசைக்கருவியாயிற்று தெரியுமா? காட்டில் வளர்ந்த மூங்கிற் புதர்களில், சில மூங்கிற் குழாய்களை வண்டுகள் துளைத்துத் துளைகள் உண்டாக்கின. அந்தத் துளைகளின் வழியாகக் காற்று புகுந்து விசையோடு வெளிப்பட்டபோது, அந்தக் குழையிலிருந்து இனிமையான ஓசை உண்டாயிற்று. அதைக் கேட்டு வியப்படைந்த மனிதன், அந்த மூங்கிற்-