பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 4.pdf/231

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

230

மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம்-4


குழாயை ஆராய்ந்து பார்த்தான். பிறகு அதில் துளைகளை அமைத்து ஊதி அதை இனிய இசைக் கருவியாக்கினான். பிற்காலத்திலே வெண்கலக் குழையினாலும் மரத்தினாலும் புல்லாங்குழலை உண்டாக்கினார்கள். பழைய வில்யாழ் மறைந்துவிட்டதுபோலப் புல்லாங்குழல் மறைந்து போகாமல் இன்றளவும் நிலைபெற்றிருக்கிறது. உலகம் உள்ள அளவும் இந்த இசைக்கருவி நிலைபெற்றிருக்கும்.

மத்தளமும் ஆதிகாலமுதல் இன்றுவரையும் இருந்து வருகிற பழைய இசைக்கருவியாகும்.

இசைக்கலையை மிக உயர்ந்த நிலையில் வளர்த்த தமிழர் வெறும் பாட்டோடுமட்டும் நின்றுவிடவில்லை. பாட்டோடு தொடர்புடைய ஆடற்கலையையும் வளர்த்தார்கள். இக்காலத்தில் தமிழ் நாட்டு இசைக்கலையும் பரதநாட்டியமும் உலகப் புகழ்பெற்று விளங்குகின்றன என்றால் அதற்குக் காரணம் அக்காலம்முதல் தமிழர் இக் கலைகளை வளர்த்து வந்ததுதான். யாழ் வாசிப்பதிலும், இசை, பாடுவதிலும், நாட்டியம் ஆடுவதிலும் சிறந்தவர்களுக்குப் பட்டங் களையும் பரிசு களையும் வழங்கி மேன்மைபடுத்தினார்கள் அக் காலத்துத் தமிழர்கள், யாழ் வென்றி, ஆடல் வென்றி, பாடல் வென்றி என்று தமிழ் நூல்களில் கூறப்படுவது கலைஞர்களுக்குப் பட்டமும் பரிசும் வழங்கியதேயாகும். இசைக்கலை நாட்டியக் கலைகளில் தேர்ந்தவர்களுக்குத் தலைக்கோலி என்னும் பட்டமும், தலைக் கோல் பரிசும் வழங்கப்பட்டன. தலைக் கோல் ஆசான் என்று ஆண் மகனுக்கும், தலைக்கோலி என்று பெண் மகளுக்கும் பட்டங்கள் வழங்கப்பட்டன. தலைக்கோல் என்பது தங்கத்தினாலும் வெள்ளியினாலும் பூண்கள் அமைத்து நவரத்தினங்கள் இழைக்கப்பட்ட கெட்டியான மூங்கிற் கோலாகும். இக்காலத்தில் பொற்பதக்கங்கள் பரிசளிப்பது போல அக்காலத்தில் தலைக்கோல் பரிசளிக்கப்பட்டது. பண்டைக் காலத்தில் தமிழர் இசைக் கலையை வளர்த்த வரலாற்றின் சுருக்கம் இது. இனி சங்ககாலத்தில் இருந்த இசை இலக்கிய நூல்கள் எவை என்பதைக் கூறுவோம்.

அக்காலத்தில் இருந்த இசை இலக்கிய நூல்கள் இப்போது நமக்குக் கிடைக்கவில்லை. ஆனால், அந்நூல்களின் பெயர்கள் மட்டும் நமக்குத் தெரிகின்றன. சிலப்பதிகாரக் காவிய உரை, இறையனார் அகப்பொருள் உரை, சீவக சிந்தாமணி உரை, யாப்பருங்கல உரை முதலிய உரை நூல்களில் சங்ககாலத்து இசை இலக்கியங்களின் பெயர்கள் கூறப்படுகின்றன.