பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 4.pdf/233

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

232

மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம்-4



உரையாசிரியர் தொல்காப்பிய உரையில் கூறுகிறார். பரிபாடலும் கலிப்பாவும் கடவுளை வாழ்த்துவதற்கும், இன்பச் செய்திளைக் கூறுவதற்கும் இசைப்பாட்டாகப் பயன்பட்டன என்று வேறு ஓர் உரையாசிரியர் கூறுகிறார். கணக்கற்ற பரிபாடல்கள் சங்க காலத்தில் இயற்றப்பட்டன. ஆனால், அவை பிற்காலத்திலே மறைந்துபோயின.

கடைச்சங்க காலத்தில் இயற்றப்பட்ட எழுபது பரிபாடல்களில் பல பரிபாடல்கள் மறைந்துவிட்டன. இப்போது நமக்குக் கிடைத்திருப்பவை 22 பரிபாடல்களே. இவை கிடைத்திருப்பது நமது நல்ல திர்ஷ்டமே ஆகும். மாதிரிக்காகவாவது 22 பரிபாடல்கள் கிடைத்திருக்கின்றனவே என்று மகிழ்கிறோம். கிடைத்துள்ள பரிபாடல்களில், அப்பாடல்களைச் செய்த ஆசிரியர் பெயர்களும், அவற்றிற்கு இசை வகுத்தவர் பெயர்களும், அப்பாடல்களை எந்தப் பண்ணில் பாட வேண்டும் என்னும் குறிப்பும் அப்பாடல்களின்கீழ் எழுதப்பட்டிருக்கின்றன. இக்காலத்தில் பரிபாடலைப் பாடும் கலைவாணர் இலர்; எப்படிப் பாடவேண்டும் என்பதும் தெரியாது.

பரிபாடலிலிருந்து ஒன்றைமட்டும் நாம் தெரிந்து கொள்கிறோம். பரிபாடல்கள் தெய்வங்களையும், மலைகளையும், ஆறுகளையும், ஊர்களையும் சிறப்பித்துப் பாடுகின்றன. இளம்பூரண அடிகள் என்னும் உரையாசிரியரும் இதைக் கூறுகிறார். “பரிபாடற்கண் மலையும், யாறும், ஊரும் வருணிக்கப்படும்" என்று அவர் எழுதுகிறார். இதற்கு ஏற்பவே, இப்போது நமக்குக் கிடைத்துள்ள பரிபாடல்கள் தெய்வங்களையும், மதுரை நகரத்தையும், திருப்பரங்குன்றம் என்னும் மலையையும், வைகையாற்றையும் புகழ்ந்து பாடுகின்றன.

இக்காலத்து இசைக்கலைஞர்கள் தெய்வங்களைப் பற்றிய இசைப்பாட்டுகளையே பாடுகிறார்கள். மலைகள், ஆறுகள், கடல்கள், நாடுகள், நகரங்கள் முதலியவற்றைப் பாடுகிறதில்லை. சங்க காலத்து இசைக்கலைவாணர்களோ தெய்வங்களைப் பற்றித் தேவபாணி பாடியதோடு மலை, ஆறு, கடல், காடு, நாடு நகரங்களையும் பாடினார்கள். அது போலவே இக்காலத்துப் பாடகர்களும் நமது பாரததேசத்தின் கடல்வளம், காட்டுவளம், ஆற்றுவளம், மலைவளம், நாட்டுவளம், நகரவளம், தொழில்வளம் முதலிய வளங்களையெல்லாம் இன்னிசைப் பாவினால் பாடித் தேசபத்தியையும் நாட்டுப் பற்றையும் வளரச் செய்வார்களாக.