236
மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம்-4
பண்டைக் காலத்து நகரங்களைப்போலவே, உறையூரும் மதிலரண் வாய்ந்திருந்தது என்பதை, "நொச்சிவேலித் தித்தன் உறந்தை” (அகம்., 122) என்றும், “உறையூர் நொச்சி ஒருபுடை ஒதுக்கி” (சிலம்பு., நாடுகாண் காதை) என்றும் வருவதனால் அறியலாம். நொச்சி என்பது மதில். இதனால், உறையூரைச் சூழ்ந்து கோட்டை மதில் அமைந்திருந்த செய்தியை அறியலாம். சோழன் நலங்கிள்ளி உறையூரின்மேல் படையெடுத்துச் சென்று, அவ்வூர்க்கோட்டை மதிலைச் சூழ்ந்து முற்றுகையிட்டான் என்றும், கோட்டைக்குள்ளிருந்த நெடுங்கிள்ளி வாயிலை அடைத்துக்கொண்டு உள்ளேயே இருந்தான் என்றும் (புறம்., 45) கூறப்படுவது இதனை வலியுறுத்துகின்றது.
உறையூரில், பங்குனி உத்திரத் திருவிழா பேர் போனது. என்னை? “மதுரை ஆவணி அவிட்டமே, உறையூர் பங்குனி யுத்திரமே, கருவூர் உள்ளி விழாவே என இவையும்" என்று இறையனார் அகப்பொருள் உரை கூறுவது காண்க.
உறையூரில் ஏணிச்சேரி என்னும் ஒரு தெரு இருந்தது (சேரி = தெரு). இந்த உறையூர் ஏணிச்சேரியில் முடமோசியார் என்னும் புலவர் வாழ்ந்திருந்தார். இவர் அல்லாமல் இன்னும் சில புலவர்களும் இவ்வூரில் வாழ்ந்திருந்தார்கள். அவர்கள் உறையூர்க் கதுவாய்ச் சாத்தனார், உறையூர் இளம்பொன் வாணிகனார், உறையூர் சல்லியங்குமரனார், உறையூர்ச் சிறுகந்தனார், உறையூர்ப் பல்காயனார், உறையூர் மருத்துவன் தாமோதரனார், உறையூர் முதுகண்ணன் சாத்தனார், உறையூர் முதுகந்தனார் முதலியோர் இவர்கள் இயற்றிய செய்யுள்கள் சங்க நூல்களில் காணப்படுகின்றன.
உறையூர் அரசனுடைய மாளிகை பெரிய கட்டடம். "பிறங்கு நிலை மாடத்து உறந்தையோன்" (புறம், 69) என்பது காண்க.
உறையூரை ஆண்ட சோழ அரசர்களைப் பற்றியும் ஏனைய வரலாறுகளைப் பற்றியும் ஈண்டு எழுதவேண்டுவதில்லை. சைவ நாயன்மார்களில் ஒருவராகிய புகழ்ச் சோழநாயனாரும், ஆழ்வார்களில் ஒருவராகிய திருப்பாணாழ்வாரும் உறையூரில் இருந்தவர்கள்.
உறையூர் எப்படி அழிந்தது?
இவ்வாறு சங்க காலத்திலும் பிற்காலத்திலும் சிறப்புற்றிருந்த உறையூர் கி.பி. 11ஆம் நூற்றாண்டுக்குப் பிறகு மண்காற்றடித்து மண்ணால்