பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 4.pdf/238

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பண்டைத் தமிழகம் - வணிகம், நகரங்கள் மற்றும் பண்பாடு

237



மூடுண்டு அழிந்துபோயிற்று என்பதைப் பிற்காலத்துத் தமிழ் இலக்கியங்களாலும், அவற்றின் உரையினாலும் அறியக் கிடக்கிறது. இதனை ஆராய்வோம். உறையூர் அழிந்த செய்தி தக்கயாகப் பரணி உரையிலிருந்து தெரியவருகிறது. சமணர்கள் தமது மந்திரவலிமை யினாலோ, தவவலிமையினாலோ கல்மழையும் மண் மழையும் பொழியச் செய்து உறையூரை அழித்தார்கள் என்பது அவ்வுரைச் செய்தி:

"மலைகொண் டெழுவார் கடல்கொண் டெழுவார்
மிசைவந்து சிலாவருடஞ் சொரிவார்
நிலைகொண் டெழுவார் கொலைகொண் டெழுதற்
கிவரிற் பிறர்யாவர் நிசாசரரே"

என்பது ஒட்டக்கூத்தர் இயற்றிய தக்கயாகப் பரணி 70ஆம் தாழிசை. இதற்குப் பழைய உரைகாரர் இவ்வாறு விளக்கங் கூறுகிறார்:

“உறையூரில் கல்வருஷமும் மண்வருஷமும் (வருஷம்-மழை) பெய்வித்து, அதனைக் கெடுத்துத் துரோகமுஞ் செய்தார் இவர் (சமணர்). அதற்குப் பின்பு இராசதானி திருச்சிராப்பள்ளியாயிற்று.”

இதனால் நாம் தெரிந்துகொண்டது என்ன? 'உறையூர் மண்மூடி மறைந்துவிட்டது; இவ்வூர் மண்மூடிப் புதையுண்டதற்குக் காரணமாக இருந்தவர் சமணர்' என்பதை இவ்வுரைப் பகுதியால் அறிகிறோம்.

தக்கயாகப் பரணி நூலாசிரியராகிய ஒட்டக்கூத்தருக்கும், அதன் உரையாசிரியருக்கும் (இவர் பெயர் முதலியவை தெரியவில்லை) பிற்பட்ட காலத்ததாய செவ்வந்திப் புராணம் என்னும் நூலும் உறையூர் மண்ணில் புதையுண்டு மறைந்த செய்தியைக் கூறுகிறது. ஆனால், அதை அழித்தவர் சமணர் என்று கூறவில்லை. சிவபெருமான் சோழ அரசன் மேல் சீற்றங் கொண்டு அவ்வூரை அழித்தான் என்று இந்தப் புராணம் கூறுகிறது. இப்புராணத்தை இயற்றியவர் கி.பி. 16ஆம் நூற்றாண்டில் இருந்தவராகிய சைவ எல்லப்ப நாவலர். செவ்வந்திப் புராணத்துக்குத் திருச்சிராப்பள்ளிப் புராணம் என்னும் பெயரும் உண்டு. இப்புராணத்திலே, உரையூரழிந்த சருக்கம் என்னும் சருக்கத்திலே, பராந்தகன் என்னும் சோழ அரசன்மீது சிவபெருமான் கோபங் கொண்டு, அவனது நகரமாகிய உறையூரை அழித்தார் என்னும் செய்தி கூறப்படுகிறது:

"மாமுகிற்கணம் இடத்ததிர்ந்து
எழுந்துமண் மழையைத்