பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 4.pdf/24

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பண்டைத் தமிழகம் - வணிகம், நகரங்கள் மற்றும் பண்பாடு

23


படுத்தினார்கள். பண்படுத்திய நிலத்தை ஏரினால் உழாமல் மண்வெட்டியால் கொத்திக் கிளறி ஐவன நெல்லையும் தினையையும் பயிர் செய்தார்கள். இவை வானம் பார்த்த பயிர்கள். பெரும்பாலும் மழையை எதிர்பார்த்துப் பயிரிடப்பட்டவை.

மலையுச்சியிலுள்ள பாறைகளில் மலைத்தேன் கிடைத்தது. வள்ளிக் கிழங்கு பயிராயிற்று. பலா மரங்களிலே பலாப் பழங்கள் கிடைத்தன. யானைகளையும் காட்டுப் பன்றிகளையும் வேட்டையாடினார்கள். தேனை மூங்கிற் குழாய்களில் ஊற்றிப் பதப்படுத்தி ஒருவகை மதுவை உண்டாக்கினார்கள். தினையரிசியிலிருந்தும் மதுபானம் உண்டாக்கினார்கள். மிகத் தாழ்வான சிறிய குடில்களைக் கட்டி அதன்மேல் தினைத் தாளையும், ஐவன நெல்லின் தாளையும் கூரையாக வேய்ந்த குடில்களில் வசித்தார்கள். இவர்களுடைய வாழ்க்கை கடின வாழ்க்கையாக இருந்தது. இவர்களுடைய உணவு உற்பத்தி போதுமானவையன்று. பற்றாக்குறையாகவே இருந்தது. மலைத்தேன், யானைத் தந்தம், புலித்தோல், அகில் கட்டை, சந்தனக் கட்டை ஆகியவற்றை விற்றார்கள். இவர்களுடைய இயற்கைச் சூழ்நிலை நாகரிகம் பெறுவதற்கு ஏற்றதாக இல்லை.

முல்லை நிலத்து மக்கள் வாழ்க்கை

மலைகளின் அடிவாரத்தில் உள்ளது முல்லை நிலம். சிறு குன்றுகளும் காடுகளும் காட்டாறுகளும் இங்கே இருந்தன. முல்லைக் கொடிகளும் கொன்றை (சரக்கொன்றை), குருந்து முதலான மரங்களும் இங்கு உண்டு. கானக்கோழி, மயில், முயல், மான் முதலானவை இங்கு இருந்தன. இங்கு வாழ்ந்த மக்கள் இடையர், எயினர் (எயினர் - வேடர்). இடையர் பசுக்களையும் ஆடுகளையும் எருமைகளையும் வளர்த்தார்கள். அவைகளைக் காடுகளிலும் புற்றரைகளிலும் ஓட்டி மேய்த்தார்கள். வரகு, கேழ்வரகு ஆகிய தானியங்களைப் பயிரிட்டார்கள். அவரை, துவரை போன்றவைகளையும் பயிரிட்டார்கள். குளங்களி லிருந்து நீர் பாய்ச்சினார்கள். இவை வானம் பார்த்த பயிர்கள். மழையை எதிர்பார்த்தே பயிர் செய்தார்கள். வரகு, கேழ்வரகு இவற்றை உணவாக உண்டார்கள். பால், தயிர், நெய்களையும் உணவாக உண்டார்கள்.

இவர்கள் தங்கள் வீடுகளைக் குடில்களாகக் கட்டிக் கொண்டிருந்தார்கள். வரகுத்தாள், கேழ்வரகுத் தாள்களைக் கூரையாக வேய்ந்தார்கள். இவர்களுடைய வீடுகள், குறிஞ்சி மக்களின் வீடுகளைவிட உயரமாகவும்