பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 4.pdf/240

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பண்டைத் தமிழகம் - வணிகம், நகரங்கள் மற்றும் பண்பாடு

239



நாட்டைப் பற்றி இந்த இலாகா சிறிதும் கருத்துச் செலுத்தவில்லை. தனிப்பட்ட முறையில் டூப்ரேயில் என்னும் பெயருள்ள பிரேஞ்சு நாட்டவர் தமிழ் நாட்டில் செய்த அளவு வேலைகூட இந்த இலாகா செய்யவில்லை என்றால், இதன் போக்கை என்னென்று சொல்வது! இந்த இலாகா கண்டுபிடிக்காமல் விட்டிருந்த சுமார் பன்னிரண்டு குகைக்கோயில்களையும் சாசனங்களையும் டூப்ரேயில் துரை அவர்கள் கண்டுபிடித்துக் காட்டினார். தமிழ்நாட்டுக் கோயில்களில் மறைந்து கிடந்த ஓவியங்களில் பலவற்றைக் கண்டுபிடித்துத் தெரிவித்தவரும் அவரே. அவருக்கு நமது நன்றி. அப்பெரியார் காலமாய்விட்டதற்காக வருந்துகிறோம்.

உறையூர், மதுரை, காஞ்சிபுரம், காவிரிப்பூம்பட்டினம், கொற்கை, பழையாறை, கும்பகோணம், நாகப்பட்டினம் முதலிய மிகப் பழைய இடங்கள் இன்றுவரை அகழ்ந்து பார்க்கப்படவில்லை. இவற்றையெல்லாம் ஆர்க்கியாலஜி இலாகா செய்யாமலே இருக்கிறது. செல்வர் களும், தனிப்பட்ட சங்கங்களும் அரசாங்கத்தார் உத்தரவு பெற்று அகழ்ந்து பார்க்கலாம். இத்தகைய செயல்களில் கருத்தைச் செலுத்த வேண்டும்; கண்ணுங் கருத்துமாக இருக்க வேண்டும். ஆர்க்கியாலஜி இலாகாவை அடிக்கடி தூண்டி ஊக்கப்படுத்த வேண்டும்.

(இரண்டாண்டுகளுக்கு முன்பு ஆர்க்கியாலஜி இலாகா உறையூரில் ஓரிடத்தை அகழ்ந்துபார்த்து ஆராய்ச்சி செய்யத் தொடங்கியது. ஆனால், அதிகமாக ஒன்றும் செய்யவில்லை. சரியான இடங்களைத் தக்கபடி ஆராய்ந்து பார்த்தால், உறையூரின் பழங்காலப் பொருள்கள் பல கிடைக்கும் என்பதில் ஐயமில்லை.)