246
மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம்-4
எயிற்பட்டினம் என்பது கிழக்குக் கடற்கரை ஓரமாக இருந்த ஓர் துறைமுகப்பட்டினம். எயிற்பட்டினத்தைச் சூழ்ந்து மதிற்சுவர் கோட்டையாக அமைந்திருந்தது. ஆகவே, இது எயில் பட்டினம் என்றும் சோ பட்டினம் என்றும் பெயர் பெற்றிருந்தது. (எயில் என்றாலும் சோ என்றாலும் மதில் என்பது பொருள்)
“பாடல் சான்ற நெய்தல் நெடுவழி
மணிநீர் வைப்பு மதிலொடு பெயரிய
பனினீர் படுவிற் பட்டினம்”
என்று இப்பட்டினம் (சிறுபாண். 151-153) கூறப்படுகிறது.
கடல் ஓரமாக நெய்தல் நிலத்திலே இருந்த எயிற் பட்டினத்துக்கு மேற்கே குறிஞ்சி நிலத்திலே, நல்லியக்கோடனுடைய தலைநகரமான கிடங்கில் என்னும் ஊர் இருந்தது. இதனை,
“குறிஞ்சிக் கோமான் கொய்தளிர்க் கண்ணிச்
செல்லிசை நிலைஇய பண்பின்
நல்லியக் கோடன்”
என்று (சிறுபாண். 267-269) ஆற்றுப்படை கூறுகிறது.
நெய்தல் நிலத்து எயிற் பட்டினத்துக்கும் குறிஞ்சி நிலத்துக் கிடங்கிலுக்கும் இடையிலே வேலூர், ஆமூர் என்னும் ஊர்கள் இருந்தன. இவ்வூர்கள் எல்லாம் ஓய்மா நாட்டில் அடங்கியிருந்தன. ஓய்மா நாடு என்பது இப்போதைய தென் ஆர்க்காடு மாவட்டத்தில் திண்டிவனம் தாலுகாவில் இருந்தது.
சிறுபாணன் சென்ற பெரு வழியைப் பார்ப்பதற்கு முன்னர் நத்தத்தனார் இருந்த ஊரை அறியவேண்டும். இவர் நல்லூர் நத்தத்தனார் என்று கூறப்படுகிறார். தமிழ் நாட்டிலே நல்லூர் என்னும் பெயருள்ள ஊர்கள் பல உள்ளன. நத்தத்தனார் இருந்த நல்லூர் எது என்று இடர்ப்படாதபடி, இடைகழி நாட்டு நல்லூர் நத்தத்தனார் என்று கூறப்படுகிறார்.
இடைகழி நாடு என்பது எது? இடைகழி நாடு இப்போது எடக்குநாடு என்று வழங்கப்படுகிறது. எடக்குநாடு என்பது இடைகழி நாடு என்பதன் திரிபு. இடைகழி நாடாகிய எடக்கு நாடு, செங்கற்பட்டு மாவட்டத்தில் மதுராந்தகம் தாலுகாவில் இருக்கிறது. இந்த எடக்கு (இடைகழி) நாட்டிலே இப்போதும் ஒரு நல்லூர் என்னும் சிற்றூர் இருக்கிறது. இந்த இடைகழி நாட்டு நல்லூரிலே நத்தத்தனார் என்னும் புலவர் வாழ்ந்தவ-