பண்டைத் தமிழகம் - வணிகம், நகரங்கள் மற்றும் பண்பாடு
255
மூன்றாம் பகுதியில் பதினோராம் அதிகாரத்தில் பல தேசத்து முத்துக்களைப் பற்றிக் கூறுகிறார். முதலில் தாம்ரபர்ணிகம், பாண்டிய கவாடகம் என்னும் முத்துக்ளைக் கூறுகிறார். இப் பெயர்களிலிருந்தே இவை பாண்டிய நாட்டில் உண்டான முத்துக்கள் என்பதை அறிகிறோம். பிறகு பாஸிக்யம் என்னும் முத்தைக் கூறுகிறார். பாஸிக்யம் என்பது மகத நாட்டில் பாடலிபுரத்துக்கு அருகில் உண்டான முத்து. பின்னர் கௌலேயம் என்னும் முத்தைக் கூறுகிறார். கௌலேயம் என்பது இலங்கையில் ஈழ நாட்டில் உண்டான முத்து. அதன் பிறகு கௌர்ணேயம் என்னும் முத்தைக் கூறுகிறார். கௌர்ணேயம் என்பது சேரநாட்டிலே மேற்குக் கடலிலே உண்டான முத்து.
கவுடலிய அர்த்தசாஸ்திரத்துக்குத் தமிழ் மலையாளத்தில் உரை எழுதிய ஒருவர் இதைப்பற்றி நன்றாக விளக்கி எழுதியுள்ளார். (பெயர் அறியப்படாத இந்த உரையாசிரியர், தமிழிலிருந்து மலையாள மொழி தோன்றிக்கொண்டிருந்த காலத்தில் இருந்தவர். ஆகவே, இவருடைய உரையில் தமிழ் - மலையாளச் சொற்கள் அதிகமாகக் கலந்துள்ளன.) இந்த உரையாசிரியர் கௌர்ணேயம் என்னும் சொல்லை இவ்வாறு விளக்குகிறார். “கௌர்ணேயமாவிது மல நாட்டில் முரசி ஆகின்ற பட்டினத்தினரிகே சூர்ண்ணி யாற்றிலுளவாமவு’ என்று விளக்கம் கூறியுள்ளார். இதைத் தமிழில் சொல்லவேண்டுமானால், “கௌர்ணேயம் ஆவது மலை நாட்டில் முரசி ஆகிய பட்டினத்தின் அருகே சூர்ணி ஆற்றில் உண்டாவது” என்று கூறவேண்டும்.
இந்த உரையில் முரசி பட்டினமும் சூர்ணியாறும் கூறப்படுகின்றன. இவற்றை விளக்கவேண்டும். முரசி என்பது முசிறி, புறநானூறு முதலிய சங்க நூல்களிலே கூறப்படுகிற முசிறிப்பட்டினம் இதுவே. யவன வாணிகர் மரக்கலங்களில் வந்து தங்கிய துறைமுகங்களில் இதுவும் ஒன்று. யவனராகிய கிரேக்கர் முசிறியை (Muziris) என்று கூறினர். முசிறியை வடமொழியாளர் முரசி என்றும் மரிசி என்றும் வழங்கினார்கள். பிற்காலத்தில் மலையாளிகள் முசிறியை முயிரி என்று வழங்கினார்கள். முயிரி, முயிரிக்கோடு என்றும் கூறப்பட்டது. (முசிறிக்கு அருகிலே சேர மன்னனின் தலைநகரமான வஞ்சிமா நகர் இருந்தது. வஞ்சி, வஞ்சிக்களம் என்றும் பெயர் பெற்றிருந்தது. பிற்காலத்தில் திருவஞ்சிக்களம், திருவஞ்சிக்குளம் என்று மருவிற்று) முசிறி பிற்காலத்தில் கொடுங்கோளுர் என்றும், பின்னர் கொடுங்ஙல்லூர் என்றும் பெயர் பெற்றது.